2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இனப்பிரச்சினைக்கு நாட்டுப்பற்றுடன் தீர்வு காண வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புற்றுநோய் போல் இழுபட்டுச் செல்லும் இந்த இனப்பிரச்சினைக்கு நாட்டுப்பற்றுடன் தீர்வு காண வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அரசியல் யாப்புத் சீர்திருத்தம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தங்களுடைய ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான முனைப்புகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால், இந்த சுயநல அரசியல் போக்கிலிருந்து விலகி எதிர்வருகின்ற அரசியல் யாப்புத் திருத்தம் உண்மையுடன் நாட்டின் நீண்டகாலமாக புற்றுநோய்போல் இழுபட்டுச் செல்கின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக அமைவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் தலைமைகளும் தங்களாலான அனைத்துப் பிரயத்தனங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவதன் விளைவாக ஜனாதிபதிக்கான நேசக்கரங்களை சில அரசியல் தலைமைகள் விலக்கிக் கொள்வார்களாக இருந்தாலும் கூட அந்த முயற்சியிலிருந்து ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பின்வாங்கக் கூடாது.

முன்னாள் ஜனாதிபதி சிங்களக் கிராமங்களுக்குச் சென்று இனத்துவேசத்தைக் கக்கி இனவெறி உணர்வை உசுப்பேற்றி வருவதை அவதானிக்கின்றோம்.

இவ்வாறு இதய சுத்தியில்லாத பல தலைமைகளின் கீழ் இந்த இலங்கைத் தேசம் ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

அதன் விளைவாகவே இந்த நாட்டில் கடந்த 3 தசாப்தங்களாக இரத்த ஆறும் ஓடியது.

ஆகவே எல்லோருக்கும் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும். கண்ணியமிக்க தலைவர்களாக வரலாற்றில் புகழப்பட வேண்டியவர்கள் இனவெறியர்களாக சரித்திரத்தில் தடம் பதிக்கக் கூடாது.

நாடு பாதிக்கப்படுமாக இருந்தால் அது இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும் என்பதை முன்னாள் ஜனாதிபதியும் இனவாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டைக் குழப்புவதை விட அமைதி காப்பதற்கு பணி செய்வதே அரசியல் தலைவர்களின் கடனாக இருக்க வேண்டும்.

இந்த அரசியல் யாப்புச் சீர்திருத்தமும் இழுத்தடிக்கப்பட்டு விடக்கூடாது.

மாகாண சபைகளுக்கு 13வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு இல்லாமல் பிச்சைப் பெட்டியாக இந்த மாகாண சபைகளை இயங்க வைத்துக் கொண்டு வெறுமனே அதிகாரப் பகிர்வை வழங்கி விட்டோம் என்று ஓலமிடுவது பொருந்தாது.

அடுத்த கணப்பொழுது கூட இந்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் மத்திய அரசாங்கத்துக்கு எந்தத் தடைகளும் இருக்கப் போவதில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X