2025 மே 09, வெள்ளிக்கிழமை

'இலவசக் கல்வியை அனைவரும் பயன்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டில் வழங்கப்படும் இலவசக் கல்வியை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தவேண்டும் என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.எம்.அம்சா தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு சானையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'காத்தான்குடியிலுள்ள மாணவர்களின் கல்வி நிலையை எடுத்துக் கொண்டால் ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்தில் கல்வி கற்றால் அதில் 800 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு செல்கின்றனர். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் தொகை 450 ஆகும். அதில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் தொகை 50 ஆகும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களின் தொகை 35 ஆகும். இது ஒரு ஆரோக்கியமான புள்ளிவிபரமாக தெரியவில்லை. இந்தக் குறைவு ஏன் ஏற்படுகின்றது  என்பதை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

நாம் இலவசமாக கல்வியை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் அதனுடைய பெறுமதியை விளங்காதிருக்கின்ற ஒரு துரதிஷ்டவசமான நிலைமை எம்மிடையே காணப்படுகின்றது. மாணவர்கள் அதிலும் ஆண் மாணவர்கள் கல்வியிலிருந்து இடைவிலகிச் செல்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை இங்கு காணப்படுகின்றது. இது ஒரு காத்திரமான நிலைமை அல்ல. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமாக இருந்தால் அந்தச் சமூகம் நிச்சயமாக தனது மாற்றத்தினை கல்வியின் மூலம் பெற்றாக வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு சானையாளர்களான துருக்கிக்கான இலங்கைத்தூதுவர் பி.எம்.எம்.அம்சா மற்றும் தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்; எம்.ஐ.எம்.றபீக் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது, 200 மாணவர்களுக்கு பாதணிகளும் காத்தான்குடி பிரதேச செயக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X