2025 மே 08, வியாழக்கிழமை

'ஊழல் தொடர்ந்த வண்ணமுள்ளது'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சி மலர்ந்துள்ள இக்காலகட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக பார்க்கும்போது, அரசாங்கத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் இன்னும் ஊழல் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்தகால அரசாங்கத்தில் அதிகளவான ஊழல்கள் இடம்பெற்றன. அதன் காரணமாகவே மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியை மாற்றியுள்ளனர்.

ஊழலை ஒழிக்கவேண்டுமென உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கம், ஊழல் அற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். ஆனால், நல்லாட்சி மலர்ந்துள்ள காலகட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக பார்க்கும்போது அரசாங்கத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் இன்னும் ஊழல் தொடர்ந்த வண்ணமுள்ளது. இந்த ஊழலால் பாதிக்கப்படுவது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத மிகவும் கீழ் மட்டத்திலுள்ள மக்களே.

பணப் பலமோ, அரசியல் பலமோ இல்லாத சாதாரண மக்கள் இந்த ஊழல்களால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தில் இந்த நிலைமாற்றமடையவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சி போல் இல்லாமல், அனைத்து விடயங்களிலும் நேர்மையான நீதியான ஆட்சியை ஏற்படுத்தவேண்டும்' என்றார்.

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் வி.கமலதாஸ் இங்கு தெரிவிக்கையில், 'ஊழலை ஒழித்து நல்லாட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஊழல்  இடம்பெற்றால்,  மக்கள் அச்சமின்றி அதனை அறிவிக்க வேண்டும். இலஞ்சம் ஊழல் என்பவற்றுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். இன்று அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் அவலகங்களில் பல தரப்பட்ட ஊழல்கள் இடம்பெறுகின்றன. இவை சட்டத்தின் முன் கொண்டுவரப்படல் வேண்டும்.
சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவரே ஊழலினால் மாட்டிக் கொள்கின்றார். ஆனால், பெரியளவில் ஊழல் செய்யும் முதளைகள் மாட்டுவதில்லை. அவர்கள் சட்டத்தின் முன் தப்பித்துக் கொள்கின்றனர்' என்றார்.

அரசாங்க அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தி; சம்பளம் பெறுகின்றவர்கள். அதனால் மக்களின் நலனில் அனக்கறையுடன் செயல்பட வேண்டும். ஊழலை ஒழிப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் தகவலை தர வேண்டும். ஊழல் தொடர்பில் 1954 எனும் தொலைபேசி இலக்கம் மற்றும் 0112595045 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X