2025 மே 12, திங்கட்கிழமை

'எதிர்காலத்தில் மாவட்டம் வளம் பொருந்தியதாக மாறும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்த மாவட்டம் வளம் பொருந்தியதாக மாறும் என முஸ்லிம் எயிட் ஸ்ரீ லங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான அதிகாரி ஏ.சி.பைஸர்கான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலுள்ள இரண்டு பாடசாலைகளில் சுமார் 15 இலட்ச ரூபாய் நிதியில் சுத்தமான குடிநீர் மற்றும் மலசல கூடம், கிணறு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து  பாடசாலை நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கல்குடா கல்வி வலயத்திலுள்ள ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கும் சுமார் 750 மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் 41 ஆசிரியர்களின் நன்மை கருதி அங்கு சுத்தமான குடிநீர் வசதி, நவீன மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பான கிணறு என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

'அனைவருக்கும் கல்வி' என்கின்ற அற்புதமான திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள அனைத்து சமூக மாணவர்களுக்கும் கல்விக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் முஸ்லிம் எயிட் நிறுவனம் அர்ப்பணித்துச் செயலாற்றுகின்றது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பெற்றோருக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இந்த நாட்டிலுள்ள எல்லா சமூகப் பிள்ளைகளையும் கல்வியில் மேம்பட்ட ஒரு சமூகமாக மாற்றும் குறிக்கோள் இருக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கித்தான் இந்த 'அனைவருக்கும் கல்வி' என்ற செயற்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப் புறங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் தேவையுள்ள பாடசாலைகளுக்கும் அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம், மாணவச் செல்வங்களை மேம்பாடுடைய ஒரு சமூகமாக உருவாக்குதற்கு முஸ்லிம் எயிட் நிறுவனம் இன மத பேதங்களுக்கப்பால் உதவிக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் எயிட்டிடம் இருக்கின்ற நிதி மற்றும் இன்னபிற வளங்களைக் கொண்டு தேவையான அனைத்து மக்களுக்கும் முடியுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துதவுவதில் அந்த நிறுவனம் பெருமையடைகின்றது.

வாழ்வாதாரத் தொழில்களுக்கு உதவுவதோடு, குடியிருக்க இல்லங்களையும் அமைத்துக் கொடுத்து, அவ்வப்போது ஏற்படும் இயற்கை இடர்களிலிருந்து மக்கள் மீண்டெழுவதற்காக வறட்சி, வெள்ள நிவாரணங்களையும் இளையோரை இந்த நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்காக அவர்களுக்குக் கைகொடுக்கும் பல உதவித் திட்டங்களையும் முஸ்லிம் எயிட் நிறுவனம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தி வருகின்றது.

நமது உதவித் திட்டங்களைப் பெறும் மாணவர்களும், மற்றுமுள்ள அனைத்துப் பயனாளிகளும் அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யாது சிறந்த முறையில் கண்ணியமாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X