2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'எதனோல் உற்பத்திச் சாலை அமைக்கப்படுவதை தடுப்பதற்கு மூவர் ஆதரவளிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கல்குடாவில் எதனோல் உற்பத்திச் சாலையின் நிர்மாணப் பணியை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் உட்பட மூன்று பேர் ஆதரவளிக்கவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள அவரது  அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்து வருகின்றது. மட்டக்களப்பில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் திறந்து மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்காமல், மதுபான உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கே அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றனர். 1965ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டு, பின்னர் ஏமாற்றிவிட்டது. இதேபோன்று தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். அதன் கீழ் இன்றும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது' என்றார்.

'கல்குடாவில் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் அரசாங்கம் நாங்கள்தான் என்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள். சட்டங்களை அமுல்படுத்துவது அரசாங்கம். அந்த அரசாங்கமே சட்டதிட்டங்களை மீறிச் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

கல்குடாவில் அமைக்கப்படும் எதனோல் உற்பத்திச் சாலைக்கு ஐக்கிய தேசியக்  கட்சி நூறு வீதம் வரிச்சலுகை அளித்துள்ளதுடன், வரி இன்றிய பொருள் கொள்வனவுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த எதனோல் உற்பத்திச் சாலையின் பணிகளை நிறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் எதனோல் உற்பத்திச் சாலையின் நிர்மாணப் பணியை நிறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமையவே நான் எதனோல் உற்பத்திச் சாலையின்  அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டேன்.

கல்குடாவில் அமைக்கப்படும் எதனோல் உற்பத்திச் சாலையின்  மூலம் பாதகம் இல்லை எனவும் அது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் கூறி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கையெழுத்திட மறுத்துவிட்டார். அதேபோன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளோம். அதேபோன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மகஜரை நான் ஜனாதிபதிக்கு அனுப்புவேன்.

இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடனும்; கலந்துரையாடவுள்ளேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .