2025 மே 07, புதன்கிழமை

'கைதிகளின் பிரச்சினையை சுவாமிநாதன் தீர்ப்பாரா?'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

சுவாமிநாதன், கதிர்காமர் வழி நன்றிக்கடன் தீர்ப்பாரா? அல்லது யதார்த்தம் உணர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பாரா? தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதியாக நடக்க முடியாதுவிடின், தார்மிகப் பொறுப்பை ஏற்று பதவி விலகுவாரா என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்று வெள்ளிக்கிழமை கேள்வியெழுப்பினார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், டி.எம்,சுவாமிநாதன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காட்சி மாறினாலும், தமிழர் தம் துயரம் மட்டும் மாறாது என்பது தமிழர் தலைவிதியாகும். இனப்பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,  வெளிநாட்டு அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமரை நியமித்ததன் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஒரு தமிழர் எனவும் இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதில்லை எனவும் பரப்புரைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.

தனக்கு சந்திரிகா செய்த நன்றிக்கு கை மாறாக லக்ஷ்மன் கதிர்காமரும் சர்வதேசம் எங்கும் சென்று இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை எனவும் இங்கு இருப்பது பயங்கரவாதப்பிரச்சினையே எனவும் பரப்புரை செய்து தனது நன்றிக் கடனைத் தீர்த்துக்கொண்டார்.

அதே காட்சி மீண்டும் தற்போது அரங்கேறுகின்றது. இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில் அதனைக் கையாள்வதற்கு தமிழரான டி.எம்.சுவாமிநாதனை தற்போது சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சராக்கியதன் மூலம் அரசு எதிர்பார்ப்பது என்ன?

அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் டி.எம்.சுவாமிநாதன் செயற்படப்போவது எவ்வாறு?
கதிர்காமர் போல தனது பேரினவாத எஜமானர்களை திருப்திப்படுத்தப்போகின்றாரா? அரசியல் கைதிகள் எவரும் இல்லை. பயங்கரவாதிகள் தான் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்ற பேரினவாத அரசின் பல்லவிக்கு தாளம் போடப் போகின்றாரா? அல்லது தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் யதார்த்தத்தை உணர்ந்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வாரா?

பேரினவாதிகள் எமது பிரச்சினைகள் உக்கிரமடையும்போது அதனைத் தமிழர்களிடம் கைமாற்றி தாமும் தீர்க்காது, அவரையும் தீர்க்கவிடாது தமது எண்ணங்களையும் கருத்துகளையும் அவரது வாயாலேயே வெளிப்படுத்தும் தந்திரோபாயத்தினை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளனர் என்ற யதார்த்தத்தை சுhவாமிநாதன் புரிந்துகொண்டு இந்தப் பொறுப்பினைக் கையாள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். அவ்வாறில்லாதுவிடின், இதிலிருந்து விலகுவதே அவரது தார்மிகப் பொறுப்பாக அமையும். இதன் மூலமே தமிழ் அரசியல்; கைதிகள் விடயம் தமிழ் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது என அரசு சர்வதேசத்துக்குக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் அவலத்தையும் தனக்குச் சாதகமாக்கும் கபடத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே, சுவாமிநாதன் என்ன செய்யப் போகின்றார். கதிர்காமர் வழி நன்றிக்கடன் தீர்ப்பாரா? யதார்த்தம் உணர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பாரா? தமிழ் கைதிகளின் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது விடின் தார்மிகப் பொறுப்பையேற்று பதவி விலகுவாரா? என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X