2025 மே 10, சனிக்கிழமை

'கிழக்கின் முதலீட்டு அரங்கம் - 2016'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலான 'கிழக்கின் முதலீட்டு அரங்கம் - 2016'  கிழக்கு மாகாண  சபையால் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யபபட்டுள்ள நிலையில், கொழும்பு கலதாரி ஹோட்டல் கிரான் போல் மண்டபத்தில் எதிர்வரும்  28ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம்  மாலை 06 மணிவரை நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  தெரிவித்தார்.

இந்த மாகாணத்தில் பயன்படுத்தப்படாத வளங்களை முறையாக உபயோகித்து இந்த மாகாணத்தை முன்னேற்றுவது இதன் பிரதான  இலக்காகும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை முதலீட்டுச் சபை கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி மூலோபாய அமைச்சு மற்றும் கிறிஸ்தவ விவகார சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து  கிழக்கு மாகாண சபை இந்த முதலீட்டு அரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
முதலீட்டுக்கான சூழலையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குவதை மையமாகக்கொண்டு இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடனும் இது நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக்கொண்ட ஒரு பாரிய நிகழ்வாகவும் நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்வதற்கான சர்வதேச முதலீட்டாளர்களை நேரடியாக ஈடுபடுத்தும் முயற்சியாகவும் இது அமைகின்றது. 250 சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500 முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்பர். மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் இந்த அரங்கில் பக்கேற்பதற்கு உறுதி அளித்துள்ளனர். கைத்தொழில் வர்த்தகத்துறையில் மேம்பாடு அடைந்த நாடுகளின் முதலீட்டாளர்களும் கலந்து கொள்வார்களென நம்பப்படுகிறது .

இந்த அரங்கின் வளவாளர்களாக மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச்சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பல்வேறு அமைச்சுகள் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில்  முதலீட்டாளர்கள்  இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் ஏற்படும் .

மேலும் கொழும்பு , திருகோணமலையில் அமைக்கப்படும் தகவல் மையங்கள் முதலீட்டாளர்கள் தாம் எந்த துறையில் முதலீடு செய்யலாம் என்பது தொடர்பிலான  தீர்மானத்தை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் . சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, வர்த்தகத்துறை, மீன் வளர்ப்பு, கால்நடை, மீன்பிடி  போன்ற இன்னோரன்ன துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X