2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு காணிகள் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு காணிகள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பில்; ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் காணி வெளிநாட்டவரினாலும் மாற்று இனத்தவரினாலும் அபகரிக்கப்பட்டுள்ளது என்று தனக்கு அறியக் கிடைத்துள்ளது எனத் தெரிவித்த அவர், தங்களைத் தமிழ் மக்களின் தலைவர்கள் என்;று  அடையாளப்படுத்துபவர்கள் இவ்விடயத்தில்  வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் எனவும் கூறினார்.
 
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இன்று (17) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'யுத்தம் முடிந்த பின்னர் திட்டமிட்ட முறையில் தமிழ்ச் சமூகத்தை நசுக்குவதற்காகப் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நல்லாட்சி ஏற்பட்ட பின்னரும்; கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றார்கள்.
 
கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பின்; எல்லைக் கிராமங்களான மயிலத்தமடு, மாதவணைக் கிராமங்களில் அத்துமீறிய பெரும்பான்பான்மை இனத்தோர், பண்ணையாளர்களைத் தாக்கியுள்ளனர். மறுநாள் அந்த இடங்களுக்கு நான் சென்று திரும்பிய அன்றிரவு மாடுகளைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
 
வாகரை, வட்டுவானில் வெளிநாட்டவருக்கும் ஹம்பாந்தோட்டையிலுள்ள பணக்காரர்களுக்கும் காணி வழங்கப்பட்டதால், அங்குள்ள 450 குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. பாசிக்குடாவில் செல்வந்தர்களுக்கு சுற்றுலா விடுதிகள் கட்டுவதற்கு காணிகளை வழங்கியதால், அப்பகுதி மீனவர்கள்  தொழிலை மேற்கொள்ள முடியாமல் கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
 
மட்டக்களப்பில்; 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டும். ஆனால், 70 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மதுபானம், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்குவது மட்டுமின்றி, நுண்கடன் நிதி நிறுவனங்களை மாவட்டத்துக்கு அனுப்பி மேலும் எமது மக்களை கடனாளியாக்குகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு தமிழ்ச் சமூகத்தை இராஜதந்திர ரீதியில் நசுக்குகின்றனர்'; என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X