2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் போதைக்கு எதிரான செயலணி அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயலணி, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் பாவனையாளர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் உடனடியாக வழங்கும் வகையிலேயே இச்செயலணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இச்செயலணி ஊடாகத் தகவல் வழங்குபவர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,'2017ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில்  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக அமையும். இதன் முதல்க் கட்டமாக போதைக்கு எதிரான மாபெரும் பேரணி ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் கிழக்கு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இச்செயற்பாடுகளில்  போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள பகுதிகள்  கவனம் செலுத்தப்படும். எனவே, இப்பேரணியில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்' என்றார்.

 'மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது மதுபானப் பாவனை அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் ஹெரோய்ன்; உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து வருகின்றது என்பதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இதற்குச்  சில  பாடசாலை மாணவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றமை கவலை அளிக்கின்றது. இதன் காரணமாக கிழக்கு மாகாண இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாவதுடன்,  இது  முளையில் கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லாவிடின், பாரிய அபாயகரமான நிலைமை உருவாகும்.

மேலும், அண்மைக்காலமாக இம்மாகாணத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, பாலியல் துஷபிரயோகச் சம்பவங்களை ஆராயுமிடத்து அதன் பின்னணியில் போதைப்பொருள்; பாவனை முக்கிய உந்துதலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது' என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X