2025 மே 09, வெள்ளிக்கிழமை

'குழப்பும் வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற்படக்கூடாது'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பல்வேறு இழப்புகளுக்கு மத்தியிலுள்ள தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டமொன்றை வழங்குவதற்கு பெரும்பான்மைச் சமூகம் தயாராகிவரும் நிலையில், அதைக் குழப்பும் வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற்படக்கூடாதென கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எமது மக்களுக்கு தீர்வுத்திட்டமொன்றை நாங்கள்  பெற்றுக்கொடுக்க வேண்டும். தற்போது அதற்கான சூழ்நிலை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டுமென்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அதைக் குழப்பி தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலைமையை தமிழ்த் தலைமைகள் ஏற்படுத்தக்கூடாது.

தற்போது நாங்கள் பலமான நிலையை அடைவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். சர்வதேசம் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடிய நிலையில், தீர்வை வழங்குமாறு அரசாங்கத்துக்கு கூறி வருகின்றது. இந்நிலையில், அதனை பலவீனப்படுத்த எங்களினால் அனுமதிக்க முடியாது' என்றார்.

'மேலும், தமிழ் மக்களின் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. நாங்கள் ஒன்றுதிரண்டு அதைப் பலப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பில் குறைபாடுகள் இல்லையென்று நான் கூற முற்படவில்லை. அவற்றைச் சீர்செய்து முன்னேற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.  

'கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல இழப்புகளைச் சந்தித்திருந்தனர். இதன் காரணமாக பாரிய பின்னடைவுகளை அவர்கள் சந்தித்துள்ளனர். இதிலிருந்து மீளவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் நாங்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கான சூழ்நிலையை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மக்களும் அதையே எதிர்பார்ப்பார்கள் என்றும் நம்புகின்றேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X