2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'சௌபாக்கியமான இலங்கையை உருவாக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது'

Suganthini Ratnam   / 2016 மே 15 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
சௌபாக்கியமான இலங்கையை உருவாக்கும் முயற்சியில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி காமாட்சி மாதிரிக் கிராம வீடுகள் கையளிப்பு நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாங்கள் உறுதியாக ஆட்சி செய்வோம். இவர்கள் எங்களை வீழ்த்தினாலும் மீண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்வோம். எமது அரசாங்கத்தின்; நல்லாட்சிச் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது' என்றார்.  
 
'ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் தற்போது புதிதாக பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஆரம்பித்து தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்று ஆராயப் போகிறார்களாம்.
ஆனால் கடந்த அரசாங்கக் காலத்தில் நடைபெற்ற நிதி, பொருளாதார மேசடிகள் பற்றி முதலில் ஆய்வு செய்யுங்கள். தொழிற்சாலைகளை ஆரம்பிக்க எவ்வளவு தரகுப் பணம் பெறப்பட்டது என்று முதலில் ஆராச்சி செய்யுங்கள்.
 
பொதுமக்களின் உணவுக்காக வீட்டுக்காக மருத்துவச் செலவுக்கான பணங்களை எடுத்து எவ்வாறு செலவிட்டீர்கள் என்று ஆராய வேண்டியது உங்களின் முதன்மையான பணி என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்;' என்றார்.

'தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையை அவதானிப்பதற்காக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, முதலில் உங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய வேண்டும். சுனாமி, வெள்ளம் போன்ற அனர்த்தங்களின்போது நிவாரணம் வழங்கப்படவிருந்த பொருட்களில் ஊழல் இடம்பெற்றுள்ளது. அதனை ஆராய்ச்சி செய்து பாதிக்கப்பட்ட மக்களின் முன் சமர்ப்பியுங்கள்' என்றார்.

'மக்கள் வாக்களித்து இந்த அரசாங்கத்தை உருவாகியுள்ளீர்கள். இனிமேல் ஒரு துப்பாக்கி அல்லது வெடிகுண்டுக் கலாசாரம் உருவாகாதவாறு உங்களை நாங்கள் பாதுகாப்போம். எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்று பல இனத்தவர்கள் வாழ்கின்றார்கள். எந்த இனத்தவரும் எவ்வித பாரபட்சத்துக்கு உட்படக்கூடாது. அவர்களது மொழி, கலாசார தனித்துவத்துடன் வாழக்கூடிய சூழலை எங்களின் அரசாங்கம் உருவாக்கும்.

நாங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். அனைவரும் ஒரே குடும்பம் போல் செயற்பட வேண்டும். எமது ஜனாதிபதியும் பிரதமரும் சுபீட்சமான நாடாக கொண்டு செல்வதற்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்' எனவும் அவர் கூறினார்.

"இவ்வாண்டு முடிவடைவதற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இதுபோன்று 10 எழுச்சிக் கிராமங்களை உருவாக்கி வறிய மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும். மேலும் 2025 ஆம் ஆண்டாகும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்கள் என்கின்ற நிலைமை இல்லாதளவுக்கு வீடமைத்துக் கொடுப்பதிலே நாம் அக்கறை எடுத்துள்ளோம்" எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X