2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'சில அரசியல் தலைமைத்துவங்களின் சுயநலத்தால் மக்கள் காணிகளை இழந்து ஒட்டாந்திகளாக மாறியுள்ளனர்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
'வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் வங்குரோத்து அரசியல், பொறுப்பற்ற தன்மை, சுயநலப்போக்கு ஆகியவை காரணமாக எமது மக்கள் காணிகளை இழந்து ஒட்டாந்திகளாக மாறியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மக்களால் ஓரங்கட்டப்பட வேண்டும்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
 
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில்  திங்கட்கிழமை (17)  மாலை நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றியபோது, '1990ஆம்  ஆண்டிலிருந்து இடம்பெற்ற வன்முறை காரணமாக ஏறாவூர் நான்காம் மற்றும் ஐந்தாம் குறிச்சிக் கிராமங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கிராமங்களில் உயிர், உடைமைகள் மாத்திரமன்றி, வளங்களும் வன்முறை காரணமாக இழக்கப்பட்டுள்ளன.
 
மேலும், கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஏறாவூர் நான்காம் மற்றும் ஐந்தாம் குறிச்சிக் கிராமங்களில் தலா வீடு 8 இலட்சம்  ரூபாய் பெறுமதியில்  20 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம்.  இந்தக் கிராமங்களுக்கு இன்னும் 150 வீடுகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன.  
 
கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க  அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினால்  இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  தங்களின் காணிகளை இழந்துள்ளார்கள்' என்றார்.  
 
'சில தினங்களுக்கு முன்னர் மீதொட்டமுல்லப் பகுதியில்;  குப்பைமேடு சரிந்ததில் பல உயிர்கள் பலியாகியுள்ளதுடன், அங்குள்ள குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  இது நல்லாட்சி அரசாங்கத்தின் சீர்கெட்ட நிர்வாகத்தைக் காட்டுகின்றது. பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரிகளின் அசமந்தப்போக்கினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்ம் செய்துள்ளார்கள். பல மனுக்கள் கொடுத்துள்ளார்கள். இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் இது தொடர்பில்; கவனத்தில் கொள்ளவில்லை.
 
இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனவாதம், முதலாளித்துவம், வங்குரோத்து அரசியல் மாற்றம் அடைய வேண்டும். காலம் காலமாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஏமாற்றுப்பேர் வழிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .