2025 மே 08, வியாழக்கிழமை

'சைவத்தை வளர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சைவ பாரம்பரியங்களை பண்பாடுகளை பாதுகாத்து சைவத்தை வளர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம் என மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி சிவதொண்டர் மாநாடும் ஆறுமுக நாவலரின் எழுச்சிக் கருத்தரங்கும் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,

தமிழர்கள் என்றால் அவர்கள் சைவர்கள்தான். இந்துக்களில் பல மொழி பேசுகின்றவர்கள் இருக்கின்றார்கள். பல இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களாக இருக்கின்றார்கள்.

உலகத்தில் இந்து சமயம் நான்காவது இடத்திலே இருக்கின்றது. இலங்கை நாட்டை பொறுத்தவரையில் 1900ம் ஆண்டு இந்துக்களான நாங்கள் 23 வீதம் இருந்தோம். ஆனால், இன்று இலங்கையில் 12.6வீதம் இருக்கின்றோம்.இவ்வளவு வீதம் நாம் இங்கு வீழ்ச்சி கண்டிருக்கின்றோம் இந்த வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது.

மேற்கத்திய நாட்டாரின் வருகை 1505ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் 1602ம் ஆண்டு ஒல்லாந்தர் 1796ம் ஆண்டு பிரித்தானியர் ஆகியோர் வருகை தந்தார்கள். அவர்களின் மதங்களை எங்கள் மக்கள் மத்தியில் தினித்தார்கள். கலாசாரத்தை உட்புகுத்தினார்கள்.இதன் நிமித்தம் மத மாற்றங்கள் நடைபெற்றன.

அவை எங்கள் சமயத்திலிருந்து மதம் மாறுவதற்கு வழிவகுத்தன. அது மாத்திரமின்றி நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் அதிகப்படியாக இந்திய நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு காலத்தில் அதிகடிப்படியான குடிசனத்தொகையை அந்த மாவட்டங்கள் கொண்டிருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தார்கள்.

ஆகவே, அந்த இந்துக்களை வறுமையைக் காட்டி மதம் மாற்றியது ஒரு பக்கம் அவர்களின் இனப் பெருக்கத்தை கூட அவர்கள் பெருகி விடுவார்கள் என்ற வகையில் திட்டமிட்ட வகையில் கடந்த கால ஆட்சியாளர்கள் யுக்திகளை கையாண்டு தடுத்தார்கள். அதிலும் இந்துக்களான நாங்கள் வீழ்ச்சியைக் கண்டோம்.

ஒரு பக்கத்தில் இஸ்லாமியர்களினாலும் எங்கள் இந்துக்கள் மதம் மாற்றப்படுகின்ற சூழல் இருக்கின்றது. திருமணம் என்ற கோதாவிலும் வேறு விதமாகவும் நாங்கள் மதமாற்றத்திற்குள்ளாகின்றோம்.

இந்துக்களின் ஒருபகுதியாக இருக்கின்ற சைவர்கள் எங்கள் பாரம்பரியங்களை பண்பாடுகளை கட்டிப்பாதுகாத்து வளர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

இதனைத்தான் ஆறுமுக நாவலர் அவரது வாழ்நாளிலே சைவ மக்களுக்கு ஊட்டினார். அதற்காகத்தான் அயராது பாடுபட்டார்.

இன்று அவர் இல்லாவிட்டாலும் அவர் காட்டிய பாதையை பின் பற்றவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X