2025 மே 07, புதன்கிழமை

'சங்கத்தின் நலனுக்காக குரல் கொடுக்க அஞ்ச மாட்டோம்'

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

நாட்டை எந்தக் கட்சியினர் ஆட்சி செய்தாலும் சங்கத்தின் நலனுக்காக குரல் கொடுக்க அஞ்ச மாட்டோம். சங்கத்தை அடமானம் வைத்து பதவிகளை பெற ஒருபோதும் முயற்சிக்கவும் மாட்டோம் என அகில இலங்கை திவிநெகும உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராயச்சி உதவி உத்தியோகத்தர் சங்க பிரதான செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எ.டீ.ஜகத்குமார தெரிவித்தார்.

மாவட்ட சங்கத்தின் தலைவர் ஜ.எச்.எம்.வஹாப் தலைமையில், அம்பாறையில் நேற்று(27) நடைபெற்ற, மாவட்ட மட்ட திவிநெகும உத்தியோகத்தர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 18வருடங்களில் பல்வேறு ஆட்சியாளர்களை சந்தித்துள்ளோம். சங்கத்தின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

அதனூடாக, இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் கண்டுள்ளோம். இன்னும் பல விடயங்களுக்கு தீர்வு காணவுமுள்ளோம். இவையனைத்திற்கும்; நமது ஒற்றுமையே காரணம்.

ஆகவே, தொடர்ந்தும் நாம் ஒற்றுமையாக செயற்படும் பட்சத்தில் நமது இலக்கினை அடைய முடியும் எனவும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.பி.திஸாநாயக்காவுடன் இரு பேச்சுவார்தையில் ஈடுபட்டதன் பயனாக சில தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சேவைக்காலத்துடன் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக உடனடியான சேமலாப நிதியத்துக்கு கழிக்கப்பட்ட 8 சதவீத நிதியை வழங்குவது எனவும் சேமலாப நிதியம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபின் மிகுதியான 12 சதவீத நிதியை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.

உடனுக்கு அமுலுக்குவரும் வரையில் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் 10இலட்சம் ரூபாய் வரையில் வங்கியினுடாக கடன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  பதவி உயர்வுகள் வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தேசிய ரீதியில் 7,700 வெற்றிடங்கள் நிலவுவதுடன் எதிர்வரும் காலத்தில் பரீட்சை முறை மூலம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டார்.

மாநாட்டில், அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், இறுதியில், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி உயிரிழந்த எம்.தெய்வேந்திரம்பிள்ளையின் மகனிடம் சங்கத்தினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X