2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'சமயச் சடங்குகள் மூலமாகத் திருமணம் செய்துகொண்டவர்களும் உள்ளனர்'

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

இலங்கையில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளல்லாது கடந்தகாலங்களில் சமயச் சடங்குகள் மூலமாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் பலர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வயது முதிர்ந்தவர்களாகவும், தலைமுறைகளைக் கடந்தவர்களாகவும் காணப்படுவதாகக் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

இதேவேளை, அவர்களுக்கு நேரெதிராக இன்னும் பக்குவப்படாத குறைந்த வயதில் காதல் திருமணம் செய்து பெற்றோரிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் குடும்பங்களும் அதிகளவு எண்ணிக்கையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய காலங்கடந்த திருமணங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வின் மூலம் பதிவுச் சான்றிதழ்கள் பெறுகின்றவர்கள் இன்றுமுதல் சமுகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகவும் இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வைபவமொன்றைக் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு கடந்த வருடம் நவம்பர், 30ஆம் திகதியன்று நடத்தி 23 காலங்கடந்த திருமணப் பதிவுகளை வழங்கிவைத்தோம் என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் திட்ட உத்தியோகத்தர் கலாமுடீன்,

தமது வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாகவே குறித்த திருமணப் பதிவுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சட்ட உதவிகளை நாடிநிற்கும் பொதுமக்கள் இலவசமான தகவல்கள், சட்ட ஆலோசனைகள், சட்ட உதவிகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் (026-2238777), பொத்துவில் (063-2248485), அக்கரைப்பற்று (067-2279462) பிராந்திய அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அவற்றை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.  

இறுதியாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமது திருமணங்களை இதுவரையில் பதிவு செய்திராத 25 தம்பதிகளுக்கு திருமணப்பதிவுகளைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X