2025 மே 08, வியாழக்கிழமை

'சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர்'

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்ற மோசமான சூழலுக்கு வந்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய அமைப்பாளரும் பல்சமய ஒன்றியத்தின் உருப்பினருமான எம்.பி.எம்.பிர்தவுஸ் நளிமி தெரிவித்தார்.

சமயங்கள் மத்தியில் ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையிலான தீபாவளி சிறப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வினையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுத்துவரப்படுகின்றன.

அவ்வாறான நிலையிலேயே கரித்தாஸ் எகட் அமைப்பு சமய குழுக்கள் இனக்குழுக்களுக்கிடையே அவர்களின் தனித்துவங்களை சமய பண்டிகைகளை தனித்தனிச்சமூகம் கொண்டாடுவதை விடுத்து எல்லாச்சமயங்களும் ஒன்றுகூடி கொண்டாடுகின்ற ஒரு புதிய கலாசாரத்தினை தோற்றுவித்துவருகின்றது.

எந்தவொரு சமயமும் நன்மையை வளர்த்து தீமையை அழிப்பது என்ற இலக்கையே கொண்டிருக்கின்றது. எந்தவொரு சமயமும் நன்மைக்காக உழைப்பதையும் அதை வளர்க்க பாடுபடுவதையும் நாம் பார்க்கின்றோம். தீமையை ஒழிப்பதற்கு நாம் உழைக்க வேண்டும். அதற்காக கருமமாற்ற வேண்டும் என்றும் அது எமது கடமை என்றும் சொல்கின்றன.

இந்த சமூகத்தில் குரலற்றவர்கள் நசுக்கப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. இவற்றையெல்லாம் எதிர்க்கக்கூடியவர்களாக நாம் மாறவேண்டிய தேவை இருக்கின்றது.

மிகப்பெரும் தீமைகளினால் சூழ்ந்துள்ள நாட்டில் நாங்கள் இன்று வாழ்கின்றோம்.இன்று சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டு வருகின்றது.ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் மோசமான தீவிரவாத இயக்கம் மோசமான கொலைகளை செய்துவரும் சூழலில் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்ற  மோசமான சூழலுக்கு வந்துள்ளோம்.

இஸ்லாம் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கின்றதா,அடுத்தவர்களை கொல்லச்சொல்கின்றதா,அடுத்தவர்களின் வழிபாட்டு தலங்களின் மீது குண்டு வீசசொல்கின்றதா என்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை செய்து எங்களுக்குள் தெளிவொன்றை பெற்றுக்கொள்ளவேண்டிய காலத்துக்குள் நாங்கள் வந்துள்ளோம்.

இதற்கு பின்னால் உள்ள அரசியல்,இராணுவ பொருளாதார காரணங்களை புரிந்துகொள்ளவேண்டிய தேவைக்கு வந்துள்ளோம்.அதற்கான நல்ல அடித்தளத்தினை இந்த நிகழ்வு எமக்கு இட்டு தந்துள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X