2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'த.ம.வி.பு. கட்சித் தலைவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனநாயகத்தின் திறவுகோலான அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பிரதிச் செயலாளர் ஏ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'எம் நாட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு பங்களிப்புச் செய்து ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு 'கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும். கருவியால் அல்ல'  என்ற தூர நோக்கிய சிந்தனையோடு ஆயுதங்களைக் களைந்து 2004ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயகத்தின் பாதையில் பயணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து கடந்த ஒரு வருடமாக தடுத்துவைத்திருப்பது வேதனைக்குரியதாகும்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து எந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு சமாதானம் மலர வேண்டும் என இரவு பகலாக பாடுபட்ட ஒருவருக்கு ஜனநாயகம் கொடுத்துள்ள பரிசு பயங்கரவாத தடைச்சட்டம் எனும் போது இதயங்கள் கனக்கின்றன.

எங்கு  குற்றச்செயல் நடந்தாலும் அதனை விசாரிக்க வேண்டியதும் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டியதும் கட்டாயமானதொன்றாகும். எந்த குற்றவாளியும் சட்டத்தின் தீர்ப்பிலிருந்து தப்பிவிடக் கூடாது என்பதுவே எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடும் ஆகும்.

அத்தோடு முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக கருத்துக் கூறவோ விமர்சிக்கவோ நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முணையவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும்.
குற்றவாளிகளை இனங்காட்டி நீதியின் பால் தண்டனையை பெற்றுக் கொடுக்கும். அது சாதாரண பாமரன் தொடக்கம் உயர் அந்தஸ்து உள்ளவர்கள் வரை இன,வர்க்க,மொழி வேறுபாடின்றி சட்டத்தின் முன் யாவரும் சமமாகும். எனவே சட்டம் தன் கடமையைச் செய்யும்.

ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையில் போட்டியிட்டு 43000 வாக்குகள் பெற்று கிழக்கு மாகாணசபையின்  முதல் முதலமைச்சராக 4 ஆண்டுகள் தனித்துவமானதும் சமத்துவமானதுமான ஆட்சி நடத்திக் காட்டினார்.

பின்னர் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு 23000 வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டு மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சராக பல நாடுகளுக்கும் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து கிழக்கு மாகாணத்தின் பல அபிவிருத்தி பணிகளுக்கு காரணகர்த்தாவாக விளங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் மலரப்பட்ட மாகாணசபை ஆட்சியில் ஜனநாயகப் பாதையினை இனங்களுக்கிடையிலான புரிதலுடன் செவ்வனே ஆட்சி செய்தவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  மீது திணிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியினதும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரதும் எதிர்பார்ப்புமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X