Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
2017ஆம் ஆண்டு தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆண்டாக சிறுபான்மை மக்களாகிய நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இழுத்தடிப்புச் செய்யும் பேச்சுவார்த்தையாக தொடர்ந்து போய்க்கொண்டிருக்காமல், ஓரிரு மாதங்களுக்குள் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து சரியான செயல்முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டடக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், 'சிறுபான்மை சமூகத்துக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். தீர்மானங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துவரும் அதேவேளையில் அதனை குழப்புவதற்கான சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் விளங்கியுள்ளோம்.
இருந்தபோதிலும், 2017ஆம் ஆண்டு ஒரு தீர்வுத்திட்டத்தனை நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டாக சிறுபான்மை மக்களாகிய நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இழுத்தடிப்பு செய்யும் பேச்சுவார்த்தையாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்காமல் ஒரிரு மாதங்களுக்குள் தீர்வுத்திட்டத்தினை முன்வைத்து சரியான செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது.
அதற்கான முழு ஒத்துழைப்பினையும் சிறுபான்மை சமூகம் வழங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதில் மிகவும் தெளிவாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளது.
மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் கடந்த 24ஆம் திகதியே எமக்கு கிடைத்தன. அது தொடர்பில் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர்களை அழைத்து இந்த சட்டமூலத்தினை திருத்துவதற்கு தயாராகவிருப்பதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.
மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படாத அபிவிருத்திக்கான சட்டமூலத்திற்கு நாங்கள் தடையாக இருக்கப் போவதில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, அதனை பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை' என்றார்.
இதேவேளை, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும்போது விசேட அபிவிருத்தி சட்டமூலம் தேவையா என்கின்ற கேள்வியும் உள்ளது. இது தொடர்பிலும் நாங்கள் தீவிரமாக ஆராய்வோம் என இங்கு கருத்து தெரிவித்த மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago