2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'தீர்வை பெற்றுத்தரும் பொறுப்பு ஐ.தே.க., சு.க. வில் தங்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தமிழ் மக்களுக்குரிய தீர்வை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் கைகளில் தங்கியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் தென்றல் சஞ்சிகை ஏற்பாட்டில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான  மாணவர்களுக்கு நடத்திய முன்னோடிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில் சனிக்கிழமை (05) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '1977ஆம் ஆண்டு அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பின்னர், தற்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். இது ஒரு சரித்திரமாகும். அவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எனவே, இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க்கட்சித் தலைவராக எமது தலைவர் இரா.சம்பந்தன் விளங்குகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. 1956ஆம் ஆண்டு தமிழர்களுக்குரிய தீர்வை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுவந்தபோது, அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. 1965ஆம் ஆண்டு தமிழர்கள் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தபோது அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. ஆனால் தற்போது இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேசிய அரசாங்கமாக வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் தமிழர்களுக்குரிய தீர்வுத் திட்டம் உருவாகும் என எதிர்பார்க்கின்றேன்.
எமது மட்டக்களப்பு தமிழ்ச் சமூகம் கடந்த காலங்களில் கல்வியிலே சிறந்து விளங்கியிருந்தது. ஆனால் கடந்த கால யுத்த சூழல் எமது கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யுத்த வடுக்களை சுமந்த வண்ணம் தற்போது மீண்டும் கல்வியில் முன்னேறிக் கொண்டு வருகின்றது' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X