2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தமிழ் பேசும் மக்கள் சேர்ந்து வாழவேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து, அங்குள்ள தமிழ் பேசும் மக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி ஸாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (23) மாலை விஜயம் செய்த அவர், அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அல்லது தனித்தனி மாகாணம் என்ற விடயம் தொடர்பில் எமது கட்சி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முடிவு எடுக்க வேண்டும்.  

ஆயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து அம்மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள்; சேர்ந்து வாழவேண்டும் என்பது எனது விருப்பமாகும். இந்நிலையில், தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வருமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அன்பாக அழைப்பு விடுக்கின்றேன்' என்றார்.

'மேலும், வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு எங்களால் எந்தத் தடையும் இல்லை. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து, அவர்களை மீள்குடியேறச் செய்வதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் புத்தளம் உட்பட பல இடங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கான வசதி வாய்ப்புகளை மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கி, அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றச் செய்வோம்.
ஏற்கெனவே வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்குப் பூரணமான வசதி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் பூரணமான வசதி வாய்ப்புகள் செய்துகொடுக்கப்படும்.

எமது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வருகின்றது.

எமது அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் இம்மாவட்டத்திலுள்ள அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எமது கட்சி அமைப்பாளர்கள்  தெரியப்படுத்தியுள்ளனர். ஆகவே, இங்கு  வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளேன். எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X