Suganthini Ratnam / 2016 ஜூன் 23 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
--ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் யுத்;தம் இடம்பெற்ற காலத்தில் மிகத் தொலைதூர இடைவெளியில் பிரிந்து சென்றது. இதன் காரணமாக பல தப்பான அபிப்பிராயங்களும் சந்தேகமும் புரிந்துணர்வின்மையும் எங்களுக்கு இடையில் ஏற்பட்டது' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனைப் பிரதேசத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உப அலுவலகம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கிய பல்தேவைக் கட்டடம் சுமார் 87 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு, புதன்கிழமை (22) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பழையபடி தமிழ், முஸ்லிம் உறவு துளிர்க்க முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். ஏனெனில், பிரிந்து நின்றதால் இழந்தவைகள் ஏராளம். இனியும் இழக்கத் தயாரில்லை. அழிவுக்குப் பதிலாக ஒற்றுமைப்பட்டு அபிவிருத்தியை அடைந்துகொள்ள வேண்டும்' என்றார்.
'முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகப் படித்து, விளையாடி, உணவு உட்கொண்டு, தொழில் செய்து, பரஸ்பரம் நன்மை, தீமைகளில் பங்குகொண்டு வாழ்ந்து வந்த வரலாறுகள் அழிந்து விடவில்லை. மனங்களின் சந்திப்பு என்ற மாபெரும் சக்தி எங்களை அழிவிலிருந்து தடுத்து அமைதியாக வாழவைக்கப் போதுமானது' என்றார்.
'யுத்தம் முடிந்தாலும், இருளிலேயே மக்கள் இருந்தார்கள். யுத்தத்துக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம், யுத்தத்துக்குப் பின்னர் நிழல் அச்சத்துடன் கழிந்தது. அந்த நிலைமையை நாம் மாற்றியுள்ளோம்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவருவதே தற்போது இலங்கையின் முக்கிய தேவையாக உள்ளது. அதுவே தமிழர்களின் இலட்சியமும் கூட.
சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள்;, இந்த நாட்டில் வித்தியாசமான இயல்பைக் கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 பிரதிநிதிகளில் 200 பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது. அப்படி நடந்தால், வழமை அல்ல. நாகரிகமும் அல்ல. அதற்குத் தீர்வாகவே சுயநிர்ணய உரிமையைக் கோருகின்றோம்.
இது மிக அற்புதமான ஒரு காலகட்டம். பல்வேறு திசைகளில் எதிரும் புதிருமாக நின்றவர்கள் எல்லோரும் இந்த நல்லாட்சியிலே இணைந்திருக்கின்றார்கள், இதனைத் தக்க தருணமாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இதைப் போன்றதொரு காலகட்டம் இனி வரப்போவது அரிது' எனவும் அவர் மேலும் கூறினார்.

23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago