Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்
தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் வாவிக்கரையோர மர்ஹும் செய்னுலாப்தீன் ஞாபகார்த்த ஓய்வுப் பூங்காவில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் கலந்து கொண்ட மாபெரும் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,
“கிழக்கின் ஐக்கியமிக்க இந்த மாகாண சபை நல்லாட்சி இந்த நிருவாகத்தோடு மட்டும் முடிந்து விடக்கூடாது. அது இப்பொழுதிருப்பதைப் போல் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.
அவ்வாறு ஒரு சரித்திரம் படைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும். மாகாண சபைகளுக்கான சகல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு மாகாண சபையாக இந்த மாகாணத்தை மாற்றி விட்டுத்தான் நாங்கள் விலகிச் செல்வோம் என்பதிலே இந்த மாகாணத்தை தற்போது ஆளுகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் கூட்டிணைந்த நிருவாகம் திடசங்கற்பம் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த மாகாணத்தை எந்த சமூகத்தைச் சேர்ந்த எந்தக் கட்சிக் காரரும் ஆளலாம். ஆனால், அவர்கள் அதிகாரமற்ற வெறும் பொம்மை ஆட்சியாளர்களாக இருக்கக் கூடாது என்பதே எனது அவாவாகும்.
மத்திய அரசில் ஒரு நல்லாட்சி இடம்பெறுகின்றபோதும் அதனையும் விட சிறந்ததொரு நல்லாட்சி கிழக்கு மாகாண சபையிலேதான் நடைபெறுகிறது.
இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீல.மு.கா, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டிருப்பது போன்று மக்கள் மத்தியிலும் இன, மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் எம்முன்னே கோர்வையாக நிற்கின்ற சவால்களை முறியடிக்க முடியும்.
இல்லாவிட்டால் இப்பொழுதிருக்கின்ற ஐக்கியப்பட்ட இந்த சமூகத்தை இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகள் அடிப்படையில் கணப்பொழுதில் குழப்புதற்கு தீய சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. நாம் பல தியாகங்களின் மூலம் அடையப்பெற்ற இந்த ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு தீய சக்திகளுக்கு நாம் வாய்ப்பளித்து விடக் கூடாது” என்றார்.
“கிழக்கு மாகாண நல்லாட்சியைச் சீர்குலைப்பதற்காக உள்ளும் புறமும் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
இருந்தாலும், நாங்கள் மனம் சளைக்கவில்லை, உறுதியுடனிருந்து தியாகம் செய்து இன ஒற்றுமையைப் பலப்படுத்தி வருகின்றோம்.
கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் நமது மாகாணம் தேசிய ரீதியில் ஒற்றுமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இலங்கைக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கும்” எனவும் தெரிவித்தார்.
இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில்,
“தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களிடமிருந்த உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது.
றமழானின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை 'குத்ஸ்' தினமாகப் பிரகடனப்படுத்தி பலஸ்தீனத்திலே உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அக்ஷாவை மீட்பதற்காக இலங்கை முஸ்லிம்கள் உத்வேகத்துடன் பேராட்டம் நடத்தினார்கள்.
ஆயினும், தமிழர் போராட்டம் முடக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களிடமிருந்த உரிமைகளைப் பெறுவதற்கான உணர்வும் பலவீனமடைந்து விட்டது என்பது குறித்து நான் கவலையும் அச்சமும் கொண்டுள்ளேன்.
வடக்கு, கிழக்கிலே தமிழர் உரிமைப் போராட்ட உணர்வு மேலோங்கியிருந்த காலத்தில் சிறுபான்மையினாரான முஸ்லிம்களிடமும் உரிமைக்கான குரலை ஓங்கி எழுப்பும் திராணி இருந்தது.
வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற சிறுமான்மையினரான தமிழ் பேசும் தமிழர்களும் முஸ்லிம்களும் இறுக்கமாக ஒன்றிணைந்து அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய தேவை இப்பொழுது வந்திருக்கின்றது.
அடிமட்டங்களிலே இருக்கும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை நீக்க வேண்டுமானால் அரசியல் தலைவர்கள் முதல் அடிமட்ட மக்கள் வரை சிறுபான்மை என்ற ரீதியில் கை கோர்க்க வேண்டும். அதன் மூலமே எமது உரிமையை நிலைநாட்டி அபிவிருத்தி காண முடியும்.
இனவாதிகள் சிறுபான்மையினரைப் பற்றி கேவலம் கெட்ட நிலையில் பேசுவதற்கு இனியும் தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளித்துவிடக் கூடாது” என்றார்.


2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025