2025 மே 08, வியாழக்கிழமை

'தமிழ் மக்கள் இன்னும் புறந்தள்ளப்படுகின்றனர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

நல்லாட்சி என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், உரிமைகள் தொடர்பான அதிகாரப்பங்கீடு கேட்கும் தமிழ் மக்களை இன்னும் புறந்தள்ளுவதனையே அவதானிக்க முடிகிறது. இது ஆரோக்கியமானதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மாகாண சபையின் நிதி நடைமுறைகள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நியமனம், மாகாண சபை ஊடான அபிவிருத்தி நிதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கின்றன. எதிர்காலத்திலும் நடைபெறவிருக்கின்றன. இவற்றுக்கான நிதிகளை மத்திய அரசாங்கம் ஊடாக கையாளுகின்ற நடைமுறையானது மாகாண அரசினுடைய இறைமையில் தலையிடுவதற்கு ஒப்பானதாக அமையும். அத்துடன் நாகரீகமற்றதாகவே இருக்கும்.

இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையடுத்து ஜனாதிபதி  மாவட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற கட்சியின் சிரேஸ்ட, அதிக வாக்குப் பெற்றவர்களே மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவராக நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். ஆனால் பெரும்பான்மையாக 70 வீதத்துக்குத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை.

அவ்வாறு நடைபெறுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினரே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இதனையே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.இது அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு வழிசமைக்கும்.

மாகாணங்களைப் பொறுத்தவரையில் அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மாவட்ட ரீதியான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலவர்களாக இருக்கின்ற நடைமுறையே கடந்த காலங்களில் இருந்து வந்திருக்கிறது. இந்த வழமை கிழக்கு மாகாணத்தில் இம்முறை கடைப்பிடிக்கப்படவில்லை. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராகச் செயற்படவேண்டும்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நல்லாட்சி என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டு உரிமைகள் தொடர்பான அதிகாரப்பங்கீடு கேட்கும் தமிழ் மக்கள் இன்னும் இன்னும் புறந்தள்ளுவதனையே அவதானிக்க முடிகிறது. இது ஆரோக்கியமானதல்ல என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X