2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'தமிழர்களுடைய பிரச்சினைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்'

Niroshini   / 2017 மார்ச் 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,பேரின்பராஜா சபேஷ்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது போன்று தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான 2015, 20146ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கு - கிழக்கில் பட்டதாரிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் நியமனமோ அல்லது வேறு அரச தொழில்களோ விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு - கிழக்கில் 2009.05.19ஆம் திகதிக்கு முன்னர் மூன்று வருடங்கள் தொண்டர் அடிப்படையில் ஆசிரியர் வேலை செய்திருந்தால் தொண்டர் ஆசிரியர்களாக உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே, எதிர்காலத்திலும் சேவைகளை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமைக்காக போராடுகின்றீர்கள் அதற்கு நாங்கள் வரவேற்கின்றோம்.

ஜெனிவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானாலும் செல்வீர்கள் சந்தோசம். ஆனால், இது ஒரு புறம் செய்யுங்கள். அதுபோன்று மறுபுறம் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதனை தாமதித்து போகின்ற ஒவ்வொரு நேரத்திலும் ஏனைய சமூகங்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய இலாபங்களை பெற்றுக் கொள்கின்றார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு சமாந்தரமான வேலைகளைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு மாகாண சபைகள் இன்று விரும்புவதில்லை. இந்தப் பிரச்சினை நுவரெலியாவிலும் இருக்கின்றது. தேசிய பாடசாலைகளுக்கு சமமான ஏ பாடசாலைகளை தரம் உயர்த்தி அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

கல்வியை வளர்ப்பதன் மூலம் நாட்டினுடைய அபிவிருத்தியை கொண்டு செல்ல முடியும். வர்த்தக ரீதியாக செயற்பட்டாலும் அதற்கு கல்வி முக்கியம் பெறுகின்றது. அதற்கான நடவடிக்கைளை அனைத்து பாடசாலைகளும் எடுத்து வருகின்றது.

வாழைச்சேனை இந்துக் கல்லூரியை தரம் உயர்த்தி தேசிய பாடசாலையாக மாற்றி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் என்னிடம் கேட்டிருந்தார். எனவே, இதற்காக வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வழங்கினால் அதற்கான நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும்” என்றார்.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்றுகையில்,

“தேசிய பாடசாலையில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குடா கல்வி வலயமானது ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் வலயமாக காணப்படுகின்றது. பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைவாகக் காணப்படுகின்றனர். வகுப்பு தரம் 11 உள்ள பாடசாலையில் ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். 42 வருடம் பாடசாலை ஆரம்பித்தும் ஆங்கில ஆசிரியர் இல்லாத பாடசாலையும் உள்ளது.

அந்த விரைவு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. நீண்ட காலமாக கல்குடா வலயம் விரைவு என்ற வார்த்தையைக் கேட்டுக் கொண்டு தான் உள்ளது. அந்தக் கல்வி அமைச்சில் உள்ளவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி தான் உள்ளார். இதனை சொல்லுவதற்கு வெட்கமாக உள்ளது.

எங்களது பகுதி அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியது குறைவாகவே காணப்பட்டது. இதனாலே, இது பின் தள்ளப்பட்டது. அந்த வரலாற்றுப் பிழையை நாங்கள் செய்ய மாட்டோம்.

கூட்டமைப்பானது மாகாணத்துக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது. அந்த வகையில், மத்தியில் உள்ள அதிகாரங்கள் மாகாணம், பிராந்தியம் என்பவற்றிற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X