2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தமிழரசுக் கட்சி மனித உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு  உருவாக்கப்பட்டது அல்ல. அது மனிதர்களின் மனித உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி ஆகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 143ஆவது ஜெயந்திதின நிகழ்வு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மனித உரிமை எனும்போது, அந்த உரிமை எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும், அந்த விடயம் நோக்கி எங்களின் செயற்பாடுகள் செல்லவேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு உருவாக்கப்பட்டது அல்ல. அடிப்படை உரிமைகள்; மறுக்கப்பட்டதைத் தொடர்ந்தே அக்கட்சி உருவானது' என்றார்.

'ஆங்கிலேயரினால் நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டபோதிலும், அவர்களினால் தரப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அன்றாட விடயங்களில் கொண்டுள்ளோம். ஆனால், அவர்கள் செலுத்தும் அதிகாரங்களை மட்டும் இங்கிருந்து நீக்கவேண்டும். அந்த நீக்கமானது அவர்களுக்கு புரியவைத்தே நீக்கவேண்டும் என்பதே காந்தி கண்ட விடயமும் என்பதுடன், ஒரு சமுதாயத்தை கையாள்பவர்கள் கைக்கொள்ளவேண்டிய விடயமும் ஆகும்.

சட்டத்தை வெறுப்பது என்பது சட்டத்தை  திருத்துவதாக இருக்கவேண்டும் என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். சட்டத்தை திருத்துவது என்பது சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அது தவறு என்பதை விளக்கி அதனைத் திருத்தவேண்டும்.
தற்போது அரசியலாக இருந்தாலும் தொழிற்சங்கமாக இருந்தாலும் அவை  இனம், வர்க்கம், கொள்கை சார்ந்ததாக இருந்து வருகின்றன' என்றார்.

'எங்களின் நடைமுறைகள் தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இனப்பாங்கை, மொழிப்பாங்கை, ஏதாவது ஒரு அடிப்படையில் எமது உரிமையை நாங்கள்  நிலைநிறுத்துவது என்பது அறிவுபூர்வமான  செயற்பாடாக அமைய முடியாது என்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறு என்றால், அது மனித உரிமை சார்ந்ததாக இருக்கவேண்டும். அதனையே நாகரிகம் சார்ந்த உலகம் செய்கின்றது' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X