2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'நாங்கள் பிரிந்து போக மாட்டோம் - தனிநாடும் கேட்கமாட்டோம்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், எஸ்.பாக்கியநாதன்

அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கவில்லை. மாகாணங்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கக் கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தையே எதிர்பார்க்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

நாங்கள் பிரிந்து போக மாட்டோம் - தனிநாடும் கேட்கமாட்டோம் - ஒரே நாட்டுக்குள் இருந்து வாழுவதற்கு தயாராகவுள்ளோம் என்பதே த.தே.கூ.வின் நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறினார்.

தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழான வீட்டுத்தோட்ட அபிவிருத்திச் செயற்பாட்டின் கீழ், விவசாயிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு, வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தில் செவ்வாய்கிழமை (03) மாலை நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

'இந்த நாட்டிலே சிறுபான்மை மக்களை உதறித் தள்ளிவிட்டு ஆட்சி நடத்த முடியாது என்பதைக் கடந்த காலத் தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன.

'மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவை தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவர் ஜனநாயகவாதியாக மாறவேண்டும் என்பதற்கான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

'ஆனால், அவர் இந்த ஆண்டு அரசாங்கத்தை கிழ்த்துவிடுவேன் என கூறுகிறார்;. இது ஆரோக்கியமான விடயமல்லை. இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே அவதானமாக இருக்க வேண்டும்.

'த.தே.கூ.வைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவதானமாக இருக்கிறது. இந்த விடயம் தொடர்பாக உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளன. இறுதி அறிக்கை, எதிர்வரும் 09ஆம், 10ஆம் திகதிகளில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதற்கான விவாதங்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மாகாண சபைகளுக்குக் கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போது ஒவ்வொரு பிராந்தியமும் தங்களுடைய பொருளாதாரத்தைச் சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிராந்தியங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென பெரும்பான்மையினரும் கூறியுள்ளார்கள். ஆனால், ஒற்றையாட்சி வேண்டாமென சொல்லவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், நடைமுறையில் செயற்பாட்டு ரீதியில் ஒற்றையாட்சி வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள்.

இந்தியாவுக்குள் தனித் தனி மொழி பேசுகின்ற மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோன்று இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி, நாடு பிளவுபடாதளவுக்கு இருக்க முடியும். பிரிக்கப்படாத நாட்டிலே, பிராந்தியங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற விதத்தில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறிகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X