2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'நோயாளர் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்கவும்'

Suganthini Ratnam   / 2016 மே 11 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையில் மூடப்பட்டுள்ள நோயாளர் விடுதியை திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்குகின்ற எட்டு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையும் ஒன்றாகும்.

இந்த வைத்தியசாலையில் 2014ஆம் ஆண்டு நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மூடப்பட்டது. அந்த விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விடயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி காரணமாக மூடப்பட்டதாக அறிய முடிகின்றது

அது மாத்திரமின்றி, வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு மற்றும் சுற்றுமதில் அமைத்தபோது அங்கிருந்து வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மரங்களுக்கான நிதி அரச கணக்கில் வரவு வைக்கப்படாமை போன்ற இன்னும் பல விடயங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆயுர்;வேத திணைக்களத்துக்கு முறைப்பாடு  கிடைத்தது. இதனை அடுத்து ஆயுர்வேத திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட கணக்காய்வின்போது, அவதானிக்கப்பட்ட முறைகேடுகளின் விசாரணை முடிவடையும்வரை குறித்த நோயாளர் விடுதியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டமைக்கமைய  மூடப்பட்ட குறித்த நோயாளர் விடுதி சுமார் 15 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

ஆயுர்வேத திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை, சுமார் 15 மாதங்களாகியும்  வெளிவராமலுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, குறித்த வைத்தியசாலையில் நிலவும் முறைகேடுகளை சுகாதார அமைச்சும் அரசாங்கமும் விசாரணை செய்து நிர்வாகத்தை சீர்செய்வதுடன், மூடப்பட்டுள்ள நோயாளர் விடுதியை விரைவில்  திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X