Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நெருக்கடி வழங்கப்பட்டதன் காரணமாகவே தனது பூர்வீக இடத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது என ஏறாவூர்ப்பற்று -பதுளை வீதி இலுப்படிச்சேனையிலுள்ள புராதன முஸ்லிம் பள்ளிவாசல் காணியின் முன்னுரித்தாளரான மூதாட்டி சேகு இஸ்மாயில் பாத்தும்மா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரிடம், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இனத்துவேஷ நெருக்கடி காரணமாக தனது பூர்வீகக் காணி பறி போனது மட்டுமல்லாமல், தற்போது தான் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'இஸ்லாமிய இறைநேசர்களின் அடக்கஸ்தலங்கள் இரண்டு காணப்படும் அக்காணியில் எனது தந்தை 1939ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்திருக்கின்றார்.
எனது தந்தை அந்த இடத்தில் குடியமர்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அக்காணியிலிருந்த இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களை அப்பிரதேசத்தில் வாழ்ந்த முன்னோர்கள் பராமரித்து வந்துள்ளார்கள்.
தேக்கமரத்தடி அவுலியா அடக்கஸ்தலம் எனும் அந்த இடத்திலேயே நானும், பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தேன், நான் 1947ஆம் ஆண்டில் பிறந்தேன், எனக்கு இப்பொழுது 70 வயதாகிறது.
எனக்கும் ஏழு பிள்ளைகள் உண்டு. அவர்களும் எமது பூர்வீக இடமான அந்தக் காணியில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
நாம் வசித்து வந்த அந்தக் காணியின் ஒரு பகுதியில் ஸியாரம் எனப்படும் இறைநேசர்களின் இரண்டு அடக்கஸ்தலங்கள் இருக்கின்ற பகுதியை எனது தந்தை ஸியாரம் எனப்படும் அந்த இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களைப் பேணுதலாக கண்ணியமாகவும் வைத்துப் பராமரிப்பதற்காக 1962ஆம் ஆண்டு வக்பு சபைக்கு (வக்பு என்பது பள்ளிவாசல் முஸ்லிம் தரும நம்பிக்கைச் சொத்துப் பகுதி) ஒப்படைத்து விட்டார்.
அதன் பின்னர் இறைநேசர்களின் அடக்கஸ்தலமுள்ள அந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறு பள்ளிவாசல் அமைத்து அங்கு தொழுகைகளும் மார்க்க கடமைகளும் இடம்பெற்று வந்தன.
எனது பிள்ளைகளினது திருமணங்களும் மற்றும் வேறு திருமணங்களும் அந்தப் பள்ளி வாசலிலேதான் நடைபெற்றன.
இவ்விதம் இருக்கும்போது, 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலையில் பதுளை வீதிப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் படுகொலை செய்யப்பட்டதுடன் சிலர் கடத்தப்பட்டனர் ஏனையோர் அகதிகளாக வெளியேறினர்.
1990ஆம் நாம் வாழ்ந்த எமது பூர்வீக வாழ்விடத்தை எல்.ரீ.ரீ.ஈ இனர் கைப்பற்றி அவர்களது தளத்தை அமைத்து செயற்பட்டு வந்தனர்.
பின்னர் அந்தப் பகுதியில் படை நடவடிக்கை மேற்கொண்ட இராணுவத்தினர் எமது இடத்தை கைப்பற்றி முகாம் அமைத்து செயற்பட்டு வந்தனர்.
2008 ஆம் ஆண்டளவில் பதுளை வீதிப் பகுதியில் யுத்தம் முடிவடைந்து நிலைமை சுமுகமாகியதும் நாம் எமது பூர்வீக இடத்திற்குத் திரும்பும் நோக்கில் அங்கு சென்று பார்த்தோம்.
அங்கு பள்ளிவாசலும் வாழ்விடம் உட்பட அனைத்து அசையும் அசையாச் சொத்துக்களும் முற்றாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியில் கிணறும், பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரண்டு அடக்கஸ்தலங்கள் மாத்திரமே எஞ்சியிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும் சேதமாக்கப்பட்ட நிலையில் பாழடைந்து போயிருந்த எமது பூர்வீக வாழ்விடத்தையும் பள்ளிவாசலையும் புனரமைப்புச் செய்ய நாம் விரும்பினோம்.
காணியைச் சுற்றி வேலி அடைத்தோம். மறுநாள் அந்த வேலிகள் சில விசமிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
மீண்டும் வேலி அடைத்தோம். அப்போது மீண்டும் அவை சேதமாக்கப்பட்டன.
பள்ளிவாசல் வளவினுள் அமைந்திருந்த இரண்டு அடக்கஸ்தலங்களும் புல்டோஸர் மூலம் நிர்மூலம் செய்யப்பட்டன.
இது குறித்து நாம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இரு தடவைகள முறையிட்டோம். இதனிடையே இக்காணியின் பூர்வீக மற்றும் சட்டரீதியான உரித்துடையவராக நான் இருக்க அக்காணி தமிழர்களுக்குச் சொந்தமானது என புனைந்து கூறி போலியாக ஒரு வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்கள்.
சுமார் ஒன்றரை வருட காலம் இடம்பெற்ற அந்த வழக்கின் இறுதியில் காணியின் சட்டபூர்வ உரித்தாளர் நான் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதன் பின்னரும் இனத்துவேஷ நபர்களும் அதிகாரிகளும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை எமக்குத் தந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் எனக்கு உதவுமாறு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட ஏறாவூரிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் அனைவரிடமும் கோரி நின்றேன். எனினும், எவரும் எமக்கு உதவவில்லை.
இந்நிலையில் இந்தச் சவால்களை ஒரு வயோதிபப் பெண்ணாக தனித்து நின்று போராட முடியாத நான் எனது பாதுகாப்புக் கருதி அக்காணியை விற்றுவிட தீர்மானித்தேன். அதன்படி பங்குடாவெளியிலுள்ள பூசாரியான தமிழர் ஒருவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது 2 ஏக்கர் காணியை 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்று விட்டேன்.
இப்பொழுது அக்காணி புத்த பாரம்பரிய இடம் என்று சர்ச்சையைக் கிளப்பி மட்டக்களப்பு பிக்கு உரிமை கோருவதாக அறிந்தேன்.புத்த பிக்கு அக்காணிக்குள் அத்து மீறிப் பிரவேசித்து சர்ச்சையைக் கிளப்பியதன் பின்னர் நான் கரடியனாறு பொலிஸாராலும் மட்டக்களப்பு காட்டுக் கந்தோர்; பொலிஸாராலும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன். இதனை விட பொலிஸார், புலனாய்வாளர்கள் என்று கூறுவோரும் அவ்வப்போது எமது வீடு தேடி இங்கு வந்து விசாரித்துச் செல்கின்றனர்.' என்றார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago