2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'நிலத்தொடர்பற்ற அதிகார அலகே சிறந்த அரசியல் தீர்வாகும்'

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற அதிகார அலகே முஸ்லிம்களுக்கான சிறந்த அரசியல் தீர்வாகுமென ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.வை.எல்.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அவர் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கும் கிழக்கும் தனி தனி மாகாணமாக பிரிந்திருக்க வேண்டும் அல்லது சேர்ந்திருக்க வேண்டுமென்தற்கப்பால், கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு தனியான அதிகார அலகு ஒன்றை பெற்றுக் கொள்வதே முஸ்லிம்களுக்கான சிறந்த அரசியல் தீர்வாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஏனைய இனங்களுக்கு சமமானவர்கள் என்பதனையும் அரசியல் ரீதியாகவும் நிருவாக ரீதியாகவும் முஸ்லிம்கள் சமமானவர்கள் எனும் அந்தஸ்த்தை வழங்குவதற்காகவும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தேசிய இனம் என்ற வகையில் அவர்களது பாரம்பரிய பிரதேசம் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்கள் சுய நிர்ணயமுள்ளவர்கள் என்ற அந்தஸ்தின் ஊடாகத்தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் முஸ்லிம்களையும் சமமாக பார்ப்பதற்கு வழியிருக்கின்றது.

அந்த வகையில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரசேதம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது எற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களாகும். அதே போன்று, திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசமாகும். இந்த மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதான அரசியல் அதிகாரம் கொண்டதாகவும் நிருவாக அதிகாரம் கொண்டதாகவும் ஒரு அதிகார அலகு ஒன்று எந்த வடிவத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் அது முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தீர்வாக இருக்கும்.

இது தனி மாகாணம் என்றோ அல்லது தனி மாநிலம் என்ற எந்தப் பெயர் வைத்துக் கொண்டாலும் அது பரவாயில்லை.

இதில் முக்கியமாக நிருவாக ரீதியான அதிகாரங்களும் அரசியல் ரீதியான அதிகாரமும் அவசியமாகின்றன.

அதே போன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கயதான கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவது போல, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி உட்பட அதனோடு இணைந்த முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதான தனி ஒரு மாவட்டமும்  திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மூதூர், தம்பளகாமம் போன்ற பிரதேசங்களையும் அதனோடு இணைந்த முஸ்லிம் கிராமங்களையும் உள்ளடக்கியதான தனியான ஒரு மாவட்டமும் உருவாக்கப்படல் வேண்டும்.

தனியான அரசியல் நிருவாக ரீதியான ஒரு மாகாணம் உருவாக்கப்படுகின்றதோ அதே போன்று மாவட்ட அதிகார அலகும் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயங்களாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X