2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'நல்லாட்சியில் தீர்வின்றேல் அதன்பின்னரும் சாத்தியமில்லை'

Princiya Dixci   / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல் 

'தற்போதைய நல்லாட்சியில், இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், அதன்பிறகு கிட்டிய தொலைவில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சாத்தியமில்லை' என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருடப் பதவிப் பூர்த்தியையிட்டு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து, இந்த  நாட்டில் நல்லாட்சியை உருவாக்கியுள்ளார்கள்.

அதன் அடிப்டையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்து கரிசனை செலுத்தி பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது  வரவேற்கத்தக்கது,

சிறுபான்மை மக்கள், இந்த மண்ணில் நிரந்தரமாக நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வொன்றையும், ஜனாதிபதி   வழங்குவார் என்ற நம்பிக்கை, இன்னும் சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்றது

அது மாத்திரமன்றி, அதிகாரப் பகிர்வின் மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமைபெறும் என்பதை மறுக்க முடியாது என்பதுடன், அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வினூடாக வழங்கி, யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்னும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் சிறுபான்மை மக்களின் வாழ்வை, துரிதமாகக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தமது பங்களிப்பை வழங்குவார் என்றும் நாம் முழுமையாக நம்புகின்றோம்.

மேலும், இனவாதம் இந்த நாட்டில் மீண்டும் தலைதூக்கி தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், சிறுபான்மை மக்கள் அரசின் மீது அதிருப்தியுறும் சூழல் ஏற்பட்டுள்ளதையும் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியவர்கள் இதனைக் கருத்திற் கொண்டு இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தரவேண்டும். 

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் எந்வொரு செயற்பாட்டுக்கும், கிழக்கு மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளார்கள்.

அதேவேளை, சில அமைச்சர்கள் இனவாதிகளுடன் கை கோர்த்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது  என்பதை, இங்கு தயக்கமின்றிச் சுட்டிக்காட்டியாக வேண்டும்,

ஆகவே, அரசின் தலைவர் என்ற வகையில், இனவாதிகளுக்கு உரமூட்டும் அமைச்சர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியவர்களை கேட்டுக்கொள்வதுடன் இதன்மூலம், ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்லாட்சி, மேலும் வலுப்பெறும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X