Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், காத்திரமான நடவடிக்கை அவசியம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறுபான்மை மக்களது ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கம், சிறுபான்மை மக்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட வேண்டும் எனவும், இனவாத பேச்சுக்களுக்கு அது ஒருபோதும் இடமளிக்கக் கூடாது' என்றார்.
'நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை தொடர்பில் சிறுபான்மை மக்கள் அச்சமடைந்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்த சிறுபான்மை மக்கள் தங்களது மத அரசியல் உரிமைகள் நல்லாட்சியில் பாதுகாக்கப்படும் என நம்பியிருந்தனர். ஆனால், அண்மைக்காலமாக நடந்தேறும் சில சம்பவங்களினால் நல்லாட்சி மீது சிறுபான்மை மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் போது பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சரவையில் எடுத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தனிப்பட்ட ரீதியிலும் சந்தித்து பேசியுள்ளனர்.
சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளன. அதில் இனவாத பேச்சுக்களும் சமூக வலையத்தளங்களில் இனவாத பிரசாரங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கு அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் - இனவாத கருத்துக்கள் பரப்புவதை தடுப்பதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படும் என நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டது. இதனை காலம் தாமதிக்காது அமுல்படுத்த வேண்டும். அதனால், நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத சக்திகளை தடுப்பதற்கும் - அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் அது பக்கபலமாக அமையும்' என மேலும் தெரிவித்துள்ளார்.
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago