2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'புதிய மதுபானச்சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவுக்கதிமாக மதுபானச்சாலைகள் உள்ளதாகவும் ஆகையால், புதிய மதுபானச்சாலைகளுக்கு இனிமேல் அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்புச் சிறைச்சாலையில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் இருந்துவரும் மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஒப்பமிட்ட கடிதத்தை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோருக்கு சனிக்கிழமை (11)  அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கும்புறுமூலைப் பகுதியில் மதுபானச்சாலை அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. வர்த்தமானி அறிவித்தலின்படி கிழக்கு மாகாணத்தில்; 82 மதுபானச்சாலைகளே இருக்க முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 62 மதுபானச்சாலைகள் உள்ளன' என்றார்.

'யுத்தம், இயற்கை அழிவுகளால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து, தங்களின் வாழ்வாதாரத்துக்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றனர். மேலும், கும்புறுமூலைப் பகுதியில் மதுபானச்சாலை அமைக்கப்படுமாயின், மதுபான விற்பனை விரிவாக்கல் செயற்பாடுகளில் மூலம் மதுபான விற்பனையாளர்களுக்கு அதிகூடிய சலுகைகள் கிடைத்து மாவட்டத்தின் மதுபான விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்குமே தவிர, ஒட்டுமொத்தத்தில் இப்பிரதேசம் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும். இதன் காரணமாக இளம் சந்ததியின் கல்வி பாதிக்கப்படும். குடும்ப வன்முறை, குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

இதற்கு எதிராக  பொது அமைப்புகளும் மக்களும் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில், இன்னும் புதிதாக மதுபானச்சாலைகளை அமைப்பதால் மேலும் பாரதூரமான அழிவு  ஏற்படும். இது தொடர்பில் அக்கறையுள்ள தரப்பினர் கவனம் எடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X