2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'போராட வேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்டவர் தான் சிவராம்'

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஊடகத்துறை என்பது ஓர் ஆயுதம். மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். இந்த ஒரு காரணத்துக்காகவே ஒருவர் பேனா முனையில் போரிட வேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்டவர் தான் சிவராம் ஆவார் என மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை, விரிவுரையாளர், கல்வியியலாளர், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.

மேலும், தமிழுலகு இதுவரை கண்ட பத்திரிகையாளர்களுள் பெரிய இடத்துக்குரியவராக மதிக்கப்படப்போகும் சிவராமின் மறைவை அவரது பத்திரிகை உலகப் புகழ்  அவரது மற்றைய திறமைகளை மறைத்து நிற்கின்றன என்றே கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 11ஆவது ஆண்டு ஞாபகார்த்த நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தராகி, எஸ்.ஆர். எனப் பல புனைப்பெயர்களால் அழைக்கப்பட்ட ஊடகவியலாளன் சிவராம் யார் என்பதை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

உண்மையில் ஒரு பத்திரிகையாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிவராமின் மொழியிலேயே சிவராமின் கருத்தை இங்கு முன்வைப்பது இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானது.

ஒரு பத்திரிகையாளன் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் பொறுப்புடன் எழுத வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் அரசியல் சிந்தனையை நெறிப்படுத்தும் வகையில் அவன் செய்தி முறையும் கொடுக்கும் தகவல்களும் அமையவேண்டும்” என்றார்.

“ஊடகவியலாளனின் தொழில் நேர்மையும் விசுவாசமுமே ஒரு சமுதாயத்தின் ஊன்றுகோல். அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு சமுதாயம் அந்த ஊன்றுகோலைப்பிடித்து எழுந்து நிற்கமுடியும். இந்த அரசியலை ஊடகத்துறை செய்ய வேண்டும். ஏனெனில் ஊடகத்துறை என்பது அரசியல் சார்ந்ததாக அவசியம் இருந்தேயாக வேண்டும். ஏனென்றால் மனிதனுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் சார்ந்தனவாகவே இருக்கின்றன.

அந்த நடவடிக்கைகளில் ஊடகத்துறையும் ஒன்று. அரசியலில் இருந்து ஊடகத்துறையைப் பிரிக்க முனைவோர் நம்மை ஒரு தவறான பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஏனெனில், உணர்ச்சியும் அனுபவமும் மனிதனது இதயத்துக்கு நெருங்கியவை. அரசியல் கருத்துக்களோ யாவருக்கும் பொதுவானவை. வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு உடையனவல்ல என்று சிலர் கருதக்கூடும்.

ஆனால், அத்தகைய கருத்துச் சரியானதா என்று சிந்தித்துப்பார்த்தல் தகும். நமது காலத்தில் அரசியல் கருத்துக்களும் சித்தாந்தங்களும் எத்தனையோ மனித உள்ளங்களிலே ஆழ்ந்த உணர்ச்சியைக் கிளறிவிடவல்லனவாயுள்ளன. எத்தனையோ மக்களின் மனங்களில் குணங்களை நிச்சயிப்பனவாயிருக்கின்றன.

எனவே, நேர்மையோடு சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் எந்த ஓர் எழுத்தாளனும் அரசியல் சிந்தனைகளைப் புறக்கணிக்க முடியாது என்ற கருத்தாக்கத்தில் சிவராம் மிகத் தெளிவுடன் செயற்பட்டவர்.

இதனால் தான் தமிழர் அரசியலில் இன்று நிலவும் பல குறுபடிகளுக்கு எமது வரலாற்றைப் பற்றிய தெளிவின்மையும் அறிவின்மையும் முதன்மைக் காரணங்களாகும்” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X