2025 மே 10, சனிக்கிழமை

'மைதானத்தை வழங்குவதற்கு தீர்மானம்'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நீண்டகாலமாக புனர்நிர்மாணப்பணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை, மைதான புனர்நிர்மாணப்பணிகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் விளையாட்டு நிகழ்வுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற வெபர் விளையாட்டு மைதான நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார்,

வெபர் விளையாட்டு மைதானம் 2012ஆம் ஆண்டு புனரமைப்புக்காக வழங்கப்பட்டிருந்தது. மூன்று பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மைதானமும் பார்வையாளர் அரங்கும் ஒரு பகுதியாகவும் நீச்சல் தடாகமும் உள்ளக அரங்கும் இன்னுமொரு பகுதியாகவும் ஏனைய பகுதியாகவும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான ஆவணங்கள் மாநகரசபையில் இருக்கவில்லை.இது விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் நேரடியாக செய்யப்பட்ட வேலைத்திட்டமாகவுள்ளது.

அந்த அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சு மூலம் நேரடியாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளையும் இரண்டு ஒப்பந்தகாரர்கள் செயற்படுத்தியுள்ளனர்.

வெபர் விளையாட்டு மைதானத்தை விரைவில் பூர்த்திசெய்து கையளிக்கவேண்டும் என கடந்த காலத்தில் பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் இன்று அது கைகூடியுள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது வெபர் மைதானத்தின் நிலையினை அறிவிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. கடந்த 11ஆம் திகதி பார்வையாளர் அரங்கும் மைதானமும் மட்டக்களப்பு மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே அதனை கையேற்றோம்.

மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை தொடர்ந்த காரணம் மற்றும் விளையாட்டு வீரர்கள்,கழகங்களின் நன்மை கருதியே அவற்றினை பொறுப்பேற்றுள்ளோம்.

அத்துடன் வெபர் மைதானத்தில் உள்ள கட்டடம் ஒன்று கிழக்கு மாகாண அமைச்சினால் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுவருகின்றது. கடந்த காலத்தில் சீராக முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த காரணத்தினால் மாணவர்களின் நிலை மற்றும் விளையாட்டு வீரர்களின் நிலையினை கருத்தில் கொண்டு இதனைப் பொறுப்பேற்றோம்.

எதிர்வரும் 22ஆம் திகதி வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு அனுமதியை கோரியுள்ளனர். மைதானத்தை வழங்குவதாக தற்காலிக உத்தரவாதம் அளித்துள்ளோம். புனர் நிர்மாணப்பணிகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த வருடம் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளோம்.

பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பதற்கு 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மைதான நிர்மாண பணிகளுக்கு 93 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X