2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. எல்லையில் அத்துமீறிய குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு எல்லையில் அத்துமீறிய குடியேற்றம் இடம்பெற்று பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக நேரில் சென்று ஆராயப்பட்டதுடன்,  அத்துமீறிய  குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறியக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை சென்று நிலைமையை ஆராய்;ந்தனர்.  

இங்கு குடியேறியுள்ள மக்கள் தாங்கள் சுமார் 300 குடும்பங்கள் வரை கடந்த மூன்று வருடங்களாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களுக்கான உதவிகளை மட்டக்களப்பு மங்களராமய விகராதிபதி செய்து வருவதாகவும் கூறினார்.

இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் உள்ள விகாரதிபதி கூறும்போது, 'நாங்கள்  1967ஆம் ஆண்டில் இருந்து இந்தப்பகுதியில் வாழ்ந்ததாகவும் பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்ததாகவும் தற்போது மீண்டும் வந்து குடியேறியுள்ளோம்' என்றார்.

இதன்போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவிக்கையில், 'உண்மையில் குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழ்ந்தமைக்கான  எந்தவித சட்ட ரீதியான ஆவணங்களும் இல்லை எனவும் உங்களின் குடியேற்றம் சட்டவிரோதமானது. எனவே, இது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு  எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டமொன்றை நடத்தவுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களுக்கு நேரில் சென்ற அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள்  பெரும்பான்மையினக் குடியேறங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X