2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மட்டக்களப்பில் காணி துப்புரவுக்கு தடை விதிப்பு'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 வருடங்களுக்கும் மேலாக தங்களின் காணிகளைப் பராமரித்து வந்த சிலரின் காணி உறுதிப்பத்திரங்கள் கடந்த யுத்த காலத்தின்போது தொலைந்து போயுள்ளன. தற்போது அவர்கள் தங்களின் காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தால் அதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன சபையினர், மகாவலி அபிவிருத்திச் சபை, உள்ளிட்டவை தடை விதித்து வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

வடமுனை, ஊத்துச்சேனை, வட்டவான், புணானை உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்நிலைமை தொடர்பில் காணப்படுவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கமத்தொழில் வாரத்தையிட்டு, பழுகாமம் கமநல கேந்திர நிலையத்தின் ஏற்பாட்டில் காந்திபுரம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான விதைகள் வழங்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'விவசாயத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள படுவான்கரைப் பகுதியில்  விவசாயச் செய்கையை மேலோங்கச் செய்ய வேண்டும். இங்கு  நில வளம், நீர் வளம் இருந்தாலும் காணிகள் செப்பனிடப்படுவது குறைவாகும். அனைவரும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுகின்றார்கள் என்ற நோக்குடன் விவசாயச் செய்கையில் ஈடுபடாமல்,  குறுகிய நிலப்பரப்பில் கூடிய வருமானம் பெறக்கூடிய வகையில்  மேட்டுநிலப் பயிர்ச் செய்கை உட்பட விவசாயச் செய்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தன்னிறைவு காண வேண்டும்' என்றார்.

'கடந்த 30 வருட யுத்த காலத்தில் நாம் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதும்,  நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னர் சில மாற்றங்கள் தென்படுகின்றன. கடந்த காலத்தில் இழந்த இழப்பை மீளப் பெற முடியாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தவற்றை  பெற்றுக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X