2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மட்டக்களப்பில் பொதுமக்களின் 20 இடங்கள் படையினர் வசம்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்புக் காணிகளைக் கொண்ட 20 இடங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, புணானை, புச்சாங்கேணி, தியாவட்டவான், கிரான், முறக்கொட்டாஞ்சேனை, கொம்மாதுறை, மயிலம்பாவெளி, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, பாலமுனை, பாலமீன்மடு, பெரியபோரதீவு ஆகிய இடங்களிலுள்ள தனியார்; காணிகளே கையகப்படுத்தப்பட்டுள்ளன.

முறக்கொட்டாஞ்சேனைப் பாடசாலைக் காணியையும் படையினரே கைப்பற்றி வைத்துள்ளனர். இன்னமும் அதனை மாணவர்களின் பாவனைக்குக் கையளிப்பதற்குப் படையினர் முன்வரவில்லை.

இது பற்றி பல தடவைகள் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பேசியுள்ளோம். ஆனால், தீர்வு கிட்டவில்லை.
நல்லாட்சியைக் கொண்டுவருவதில்  வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களும் மற்றும் இனவாதத்தையும் மதவாதத்தையும் விரும்பாத நல்லமனம் கொண்ட சிங்கள மக்களும் பாடுபட்டார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தங்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக் காணிகளைக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருவது வழமையாகி விட்டது. இந்த மக்களின் கோரிக்கை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .