Suganthini Ratnam / 2016 ஜூன் 14 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட கும்புறுமூலைக் கிராமத்தில் புதிய மதுபானச்சாலை அமைப்பதற்கான அனுமதி இதுவரையில் வழங்கப்படவில்லை என அப்பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கும்புறுமூலைக் கிராமத்தில் மதுபானச்சாலை அமைக்கப்படவுள்ளதாக அறிந்தமை பற்றி கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமை (11) மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இருந்தவாறு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடிதம் அனுப்பியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவுக்கதிமாக மதுபானச்சாலைகள் இருப்பதன் காரணமாக சமூகச் சீரழிவுகளுக்கும் வறுமை நிலைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே, இனிமேல் புதிய மதுபானச்சாலைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.
இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபைச் செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபலமான மதுசார நிறுவனம் ஒன்று கும்புறுமூலைக் கிராம அலுவலர் பிரிவில் விலைக்கு வாங்கிய 25 ஏக்கர் காணியில் எதனோல் மதுசார மூலப் பொருள் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி கேட்டு திட்ட முன்மொழிவை கடந்த மார்ச் மாதம்; சமர்ப்பித்திருந்தது. ஆயினும், அதற்கு எமது பிரதேச சபை இன்னமும் அனுமதி அளிக்கவில்லை.
உள்ளூரில் உற்பத்தியாகும் சோளம் மற்றும் நெல் ஆகியவற்றைக் கொண்டு எதனோல் தயாரிக்கப் போவதாகவும் இதன் மூலம் உள்ளூரில் சுமார் 500 பேருக்கு நேரடித் தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தனது திட்ட முன்மொழிவில் தெரிவித்திருந்தது.
அதற்கு பிரதேச சபை இன்னமும் அனுமதி வழங்காமை தொடர்பில் அந்த நிறுவனம் நினைவூட்டல் கடிதத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதேச சபைக்கு அனுப்பியிருந்தது' என்றார்.
'இது தொடர்பில் பல தரப்பினரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருவதால், அது விடயமாக சமூக மற்றும் அரசியல் மட்டத் தலைவர்களுடனும் உள்ளூராட்சித் திணைக்களத்துடனும் விரிவாகக் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்க முடியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்த கரிசனைகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025