2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மறைமுக நிகழ்ச்சிநிரலில் சிறுபான்மையினர் இனச் சுத்திகரிப்புக்காக குறி வைக்கப்படுகின்றனர்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மறைமுக நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில்; தற்போது சிறுபான்மையினர் இனச் சுத்திகரிப்புக்காக குறி வைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் வேறு பல இடங்களிலும் கூர்மை அடைந்துவரும் இன விரிசல்கள் குறித்து அபாய எச்சரிக்கையை விடுப்பதாகவும்  அவர், நேற்று (18)  கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'கடந்த வருடத்திலும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலும்  மட்டக்களப்பு, அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தில் காணிப் பிணக்குகள் தீவிரமாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதன் ஊடாக இன உறவுகள் கசப்படைந்து அவ நம்பிக்கையும் உருவாகின்றது.

மோதல் இடம்பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் மீள்குடியேற்ற இணைப்பாளராக சேவை செய்த அனுபவத்தின் அடிப்படையிலும் இந்த இன உறவுகளின் மூல காரணங்களை ஆராய்ந்து ஆய்வு செய்த வகையிலும் சில கருத்துகளை இங்கு நான் கூறுவது காலத்துக்குப் பொருத்தமானதாகும் என்று கருதுகின்றேன்' என்றார்.

'கடந்த யுத்தம்; காரணமாக இடம்பெயர்ந்து சென்ற பிரதேசங்களில் இராணுவம் காணிகளை ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்டுள்ளது என்ற குரல்களை காணிகளை இழந்த தமிழ், முஸ்லிம் மக்கள் எழுப்பினார்கள். ஆனால், பெரும்பான்மையின மக்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்கவில்லை.

இன உறவுகளைக் குழப்புவதற்காக இனவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அபாய எச்சரிக்கையை மக்களுக்கு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்கள், தங்களுடைய பூர்வீக நிலங்களுக்குத் திரும்புவது அந்த மக்களுடைய உரிமையாகும்.

இனவாதங்களுக்கு அப்பால் சென்று அந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கக் கட்டமைப்புகளுடைய கடமையாகும்.

மீள்குடியேறலுக்கும் மீள் திரும்பலுக்குமான சர்வதேச நியமங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்'; என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X