2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்தத்தால் பலதையும் இழந்தோம்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் நாம் பலவற்றை இழந்தோம். தற்போது  நல்லாட்சி என்ற ஆட்சிமுறையை நாம் எல்லோரும் ஏற்படுத்தியுள்ளோம்' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் மூலம் கொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரிப் பிரதேச கால்நடைப் பண்ணையாளர்களுக்கு அங்குள்ள சனசமூகக் கட்டடத்தில் நேற்று புதன்கிழமை ஆடுகள் வழங்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த அரசியலில் பங்குபற்றுதல் மிக முக்கியமானது. இதற்காக இத்தனை போராட்டங்கள் ஏற்பட்டன. இதனைத் தள்ளியிருந்து பார்ப்பதை விட, இதில் பங்குபற்றுதலை மேற்கொண்டு இதன் மூலம் எமது மக்களுக்கு எவற்றையெல்லாம் எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை எமது கொள்கைகள் பிறழா வண்ணம் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும்.

இன்று இருக்கின்ற அரசுக்குள்ளேயே அதற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் முறியடித்துக் கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நல்லாட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாமும் பங்குதாரர்கள் என்ற விதத்தில் செயற்படவேண்டும். இவற்றையெல்லாம் நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுத்தவேண்டும்' என்றார்.

'தற்போது இன்னும் சற்று வித்தியாசமாக தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மை மக்களுக்கு எதுவும் சென்றடைந்துவிடக் கூடாது எனப் பல மத்திய அரச அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசில் பல நல்ல சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றபோது அவர்களை அணுசரணையாகக் கொண்டு எமது அரசியல் தீர்வு நோக்கி நகர்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டு நாம் விலகிவிடக் கூடாது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X