2025 மே 08, வியாழக்கிழமை

'வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்னா  

கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, மாவட்டங்களில் அதிகளவு ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போதே தெரிவித்திருந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றவில்லை.

இதனை விடுத்து, அவர்களது கட்சி சார்ந்தவர்களையும் அவர்களது ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றிக் கொண்டிருப்பவர்களுக்குமாகத்தான் தற்போது மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றதையும், அவதானிக்க முடிகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், 'யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன், வன்னியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  74 சதவீதம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்குத் தலைவராக பிரதியமைச்சர் அமீரலியும் இணைத்தலைவர்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனையும் நியமித்திருப்பதாக அறிகின்றேன்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைத்தலைவராக இருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்காது என நான் நினைக்கின்றேன். மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் ஏனையவர்கள் இணைத் தலைவர்களாகவும்தான் இருக்க வேண்டும் என்பதுவே நியாயமாகும். அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவி கிடைக்கா விட்டால் இணைத் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என்பதுவே எனது நிலைப்பாடாகும்.

பிரதியமைச்சர் அமீரலி மாட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும், கிழக்கு முதலமைச்சரை இணைத் தலைவராகவும், நியமிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து விமர்சனங்கள், எழுந்த பின்னர்தான், தற்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம், காங்கிரஸ், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடமிருந்தும், விமர்சனங்கள் வரும்போது அக்கட்சிளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக நியமிக்கின்ற நிலமை தற்போது இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக நியமிக்கின்ற நிலமையினை விடுத்து, நியாயமான நிதானமான இந்த அரசாங்கம், தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த தற்போதைய ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அபிவிருத்திக்  குழுவிற்குத் தலைவராக நியமித்து கிழக்கு மாகாண முதலமைச்சரை மாத்திரம் இணைத்தலைவராக நியமிக்க வேண்டும். இதனையே மாவட்ட மக்களும் விரும்புகின்றார்கள்' என அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X