Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொத்தணி விவசாய சேதனப்பசளைத் தயாரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூர் மீராகேணி ரூபி முஹைதீன் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் மல்லிகா தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 30 வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையாளர்களுக்கு காணிப் பயன்பாடும், இயற்கைப் பசளைத் தயாரிப்பு, திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் மீள் சுழற்சிப் பசளைப் பாவனை பற்றி விழிப்புணர்வூட்டப்பட்டது.
இங்கு ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவிக்கையில், 'எந்தவொரு வளமற்ற நிலத்தையும் வளமுள்ளதாக மாற்றி சிறந்த விவசாய அறுவடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏறாவூர் நகர பிரதேசம் சாதாரணமாக மண் அமைப்பு இயல்பாகவே விவசாயத்துக்கு வளமானதாக இல்லை. ஆயினும், இந்த வளமற்ற மண்ணை பல ஊக்கமுள்ள விவசாயிகள் இயற்கை வளம் நிறைந்ததாக மாற்றியமைத்து அதில் விளைபொருட்களை உண்டு பண்ணி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.
எமது வீடுகளில் அன்றாடம் சேரும் திண்மக் கழிவுகள் எமது நிலத்துக்கு வளம் சேர்க்கக் கூடியவை. ஆனால், இவற்றின் மீள் பயன்பாட்டினை நாம் அறியாதவர்களாக அவற்றை தெருக் குப்பைகளில் கொண்டுபோய்க் கொட்டி விடுகின்றோம்.
சாதாரணமாக எமது வீடுகளில் அன்றாடம் சேரும் தேயிலைத்தூள், வெங்காயக்கோது, முட்டைக் கோது, இலைகுழைகள், சாம்பல், அழுகிய பழங்கள், பழங்களின் கழிவுகள் இவைகள் மண்ணுக்கு மிகவும் வளம் சேர்ப்பவை. ஆனால், இவற்றை நாம் தெருக்களிலும் கான்களிலும் வாவிக்கரைகளிலும் வீசி சூழலை நாசப்படுத்துகின்றோம். ஆனால், இத்தகைய கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தினால் இயற்கை வளத்தை மாசு படுத்தாது சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.
உக்கக்கூடிய, நமது மண்ணை வளப்படுத்தக்கூடிய திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி கூட்டுப் பசளை உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த பயனைப் பெற முடியும். ஆரோக்கியக் கெடுதல் இல்லாமல் நாம் சுக தேகியாக வாழ்வதென்றால் நாம் வாழும் சூழல் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் என்பவை சிறந்ததாக இருக்க வேண்டும்.
நமக்கு அன்றாடம் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்வதற்கு பெரிய நிலப்பரப்புக்கள் தேவை என்பதல்ல. நகரப் புறங்களில் நிலமில்லாமல் சாடிகளில், சிபார்சு செய்யப்பட்ட பொலித்தீன் பைகளில் மரக்கறிப் பயிர்களை பயிரிட்டு பிரயோசனம் அடைகின்றார்கள். ஆனால், நமது பிரதேசங்களில் போதியளவு நிலமுண்டு. அதனை வளமுள்ளதாக மாற்றி தேவையான அளவு மரக்கறிகளை விளைவிக்க முடியும். இதனை ஒவ்வொரு குடியிருப்பாளரும் கவனத்திலெடுக்க வேண்டும்.
அவ்வாறு பயிரிட்டு நமக்குத் தேவையான மரக்கறிகளை நமது வீட்டிலேயே உற்பத்தி செய்து வாழ்ந்தால் ஆரோக்கியமும், ஆயுளும் நீடிப்பதோடு பொருளாதாரத்தையும் மீதப்படுத்தி இயற்கையையும் அதன் சூழலையும் பசுமை குன்றாமல் பாதுகாக்கலாம்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago