2025 மே 02, வெள்ளிக்கிழமை

160 இற்கும் மேற்பட்ட படகு இயந்திரங்கள் பழுது

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனைப்பற்று, பாலமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் இயந்திரப் படகுகளுக்கு கடந்த 02 தினங்களாக பயன்படுத்திய மண்ணெண்ணையால் 160 இற்கும் மேற்பட்ட  படகுகளின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன், வியாழன் ஆகிய தினங்களில் மண்ணெண்ணை இட்ட இயந்திரப்  படகுகள் மீன்பிடிக்கச் சென்றபோது,  கடலில்  அப்படகுகளின் இயந்திரங்கள் திடீரென பழுதடைந்துள்ளன.  இதனால்,  தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் மீனவர்கள் கூறினர். 

படகுகளின் இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில், கரையை  அடைவதற்கு  அதிக நேரம் எடுத்ததாகவும் மீனவர்கள் கூறினர்.

படகுகளுக்கு பயன்படுத்திய மண்ணெண்ணையை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றதாகவும்  அதில்  டீசல் போன்ற ஒரு திரவம் கலந்திருந்ததாகவும் தெரிவித்த மீனவர்கள்,  இதனால்  இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்.

இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 05 மில்லியன் ரூபாவுக்கு மேல் நஷ்டம்  ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர்  டொமினிக் ஜோர்ஜிடம் கேட்டபோது, இது தொடர்பில்  மீனவர்கள் பலர் தன்னிடம் முறையிட்டதாகக் கூறினார்.

இந்நிலையில்,  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தான் அறிவுறுத்தியதுடன், இது தொடர்பில் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரிடம் கேட்டபோது, குறித்த மண்ணெண்ணையின் மாதிரி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆயு;வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே இது தொடர்பில் முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவுக்கும்; மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரியப்படுத்தினர். அவர் இதனை  மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மேலும், இது தொடர்பில் மீன்பிடி அமைச்சர் மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .