2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலை பேரவைக்கு அருட்தந்தை ஒருவரை நியமிக்க உயர்கல்வி அமைச்சு உறுதி

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் அருட்தந்தை கலாநிதி சில்வெஸ்ரர் சிறிதரனின் இறப்பால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய பாதிரியார் ஒருவரை நிமிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதாக உயர்கல்வி அமைச்சர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

பேரவை நியமனப் பிரச்சினை தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் நேற்று வியாழக்கிழமை மாலை நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைவாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், இப்பிரச்சினை தொடர்பிலான விளக்கங்களை கேட்டறிந்து கொண்ட உயர்கல்வி அமைச்சர் உடனடியாக பேரவையில் ஏற்பட்ட பாதிரியார் ஒருவரின் இடத்திற்கு எங்களால் முன்மொழியப்பட்டுள்ள அருட்தந்தை கிறைஸ்டன் அவுட்ஸ்கோனை நியமிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.

பேரவையில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களும் மட்டக்களப்பின் புத்திஜீவிகளும் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தினைக் கொண்டு வந்ததையடுத்து இந்த உறுதி பெறப்பட்டுள்ளது.

பாதிரியார் ஒருவரை மீண்டும் பேரவையில் நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி, வந்தறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம், மற்றும் மட்டக்களப்பு நகரிலுள்ள சௌக்கிய பராமரிப்பு பீடம் என்பவற்றின் மாணவர்கள் விரிவுரைப்பகிஸ்கரிப்பில் கடந்து 3 வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பேரவையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், அதே நேரம், தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கத்தில் ஒரெயொரு தமிழரே உள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமரர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அமைச்சராக இருந்த வேளை 94 - 95 காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒலுவிலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மாணர்கள் பல்கலைக்கழக மாவணர்கள், என அனைவரும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்தனர்.

அதையடுத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவிலில் உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது ஒரு தமிழரே பேரவையில் உள்ளார். இவ்வாறான நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சுமுகமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .