2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மன்னார் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு. மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மன்னார் நீதிமன்றத்தாக்குதலின் பின்னணியிலுள்ள அமைச்சரைக் கைது செய்யக் கோரியும், நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக சென்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டோர், மன்னார் நீதிமன்ற தாக்குதுலுக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன், தாக்குதலுடன் தொடர்புபட்ட அமைச்சரை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும், மட்டக்களப்பு நீதிமன்ற உத்தியோகத்தர்களும், ஊழியர்களும், கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நுழைவாயில் ஊடாக சென்று கோசங்களை எழுப்பிய வண்ணம், மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று நீதிமன்றத்தை அடைந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு வேண்டாம், நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே, நீதிமன்றத் தாக்குதலின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை உடனடியாகக் கைது செய், மன்னார் சம்பவத்தின் சூத்திரதாரியை உடன் கைது செய், நீதித்துறைச் சுதந்திரத்தைப் பறிக்காதே, சட்டத்தைக் கையிலெடுக்காதே போன்ற சுலோகங்களை தாங்கியவாறு சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வினோபா இந்திரன், 'நீதிமன்றத்துக்கு தடங்கலான செயற்பாட இருக்கின்றமையினால் இது தொடரக்கூடாது என்பதற்காக இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகவும் இருக்கிறது.

நாங்கள் இதுவரை காலமும் எதிர்பார்த்திருந்த அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யாரென்று தெரிந்திருந்தும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதனால் சட்டத்தரணிகளும், ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்.  அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்' என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க உப தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்ட சட்டதத்தரணிகள் சங்கம் எடுத்த தீர்மானத்திற்கமைய தொடர்ச்சியானதொரு போராட்டத்தினை நடத்தும் வகையில் இன்று முதல் போராட்டத்தினை ஆரம்பித்திருக்கிறோம்.

இப்போராட்டத்தின் முக்கிய நோக்கம் நீதித்துறை என்பது சுதந்திரமாக நடைபெற வேண்டியது, என்பதுடன், இதில் தடங்கல்கள் ஏற்படும் போது, அது நீதியானதாக நடைபெறமுயாமல் போகும் என்பதாகும்.

அந்தவகையல் நீதியை நிலைநாட்டுகின்ற நிறுவனங்கள் வலுவில்லா நிலை தோன்றினால் சட்டம் வலுவற்றதாகிப் போகின்றது என்ற வகையல் இந்த நடவடிக்கைகளை சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வகையில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .