2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வடமாகாணசபைத் தேர்தல் நடந்தால் அரசு நிச்சயம் தோல்வியடையும்: ரணில்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 29 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                (எம்.சுக்ரி,ரி.லோஹித்)


வடமாகாணசபைத் தேர்தலே தற்போது தேவை எனவும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அல்ல. அரசாங்கம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் அங்கு நிச்சயம் தோல்வியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

'அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய எந்த அவசியமும் தற்போது இல்லை. காலம் முடிவதற்கு முதலே இந்த மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துகின்றது. வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதே தற்போதைய தேவை ஆகும்.  வடமாகாணசபைத் தேர்தலை நடத்தினால் போதுமானது. வடமாகாணசபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சமடைகின்றது. வடமாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் தோல்வி அடைவோம் என்ற அச்சம் காரணமாகவே அரசாங்கம் வடமாகாணசபை தேர்தலை நடத்த முன்வரவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை எதிர்ப்தற்கு மக்கள் ஆயத்தமாகியுள்ளனர். இந்த எதிர்ப்பை மக்கள் தமது வாக்குகள் மூலம் காட்ட வேண்டும். கிழக்கில் நடைபெற்றுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 25 வீதம் தரகுப்பணம்; வாங்கப்படுகின்றது. இந்த தரகுப்பணத்தை வாங்கி அதை தனது பொக்கெற்றில் வைத்துக்கொண்டு செல்கின்றனர். இந்த தரகுப்பணத்தை யார் வாங்குகின்றார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் அவர்கள் பற்றி  கூறினால் வெள்ளை வான்  வந்துவிடும் என்ற அச்சம் உங்களுக் உண்டு.

மன்னாரில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண முயற்சிக்கின்றனர். தேர்தல் காலம்  என்பதால் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். இந்த  இரண்டு சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போதைய இஸட் கோர் புள்ளியினால் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் இந்த இஸட் கோர் புள்ளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கமே தனியாக நிறுத்தியுள்ளது. மாறாக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமாக இல்லை. தேர்தல் முடிந்தவுடன் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்துடன் சேர்ந்துகொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சில முஸ்லிம்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சில முஸ்லிம்களையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இவை இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இனவாதக்கட்சி அல்ல. இன, மத, மொழி பேதம் இன்றி செயற்படும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு ஐக்கிய  தேசியக் கட்சியில் கிடையாது. கொழும்பில் அனைவரும் சேர்ந்து தான் முஸம்மிலை மாநகர மேயராக தெரிவு செய்துள்ளனர்.  எனவே தான் இந்த அரசாங்கத்திற்கு அடி கொடுப்பதற்கு இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் அணிதிரளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் தலைமையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில் ஒரு பெண் வேட்பாளரும் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியையும் எமது கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.


  Comments - 0

  • muhammad Sunday, 29 July 2012 03:18 PM

    விஜயதாச ராஜபக்ச போன்றோர் இருக்கும் வரைக்கும் கட்சிக்கு விமோசனம் இல்ல தலைவரே.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .