2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

காத்தான்குடி கலாசார கண்காட்சிக்கு மக்களிடமிருந்து உதவி கோருகிறது பிரதேச செயலகம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கை முஸ்லிம்களின் தொன்மை மற்றும் பண்டையவரலாறும் அதற்கான வரலாற்று தடயங்கள், ஆவணங்கள், தொல்பொருட்கள் என்பன காலாகாலமாக பேணி பாதுகாக்கப்பட்டு - தொடரும் சந்ததியினருக்கு விடப்படுவது இன்றியமையாததாகும். அத்துடன் முஸ்லிம்களின் வரலாற்று தொன்மை தொடர்பான தேடல் உள்ள ஆய்வாளர்களுக்கும் இவ்வாறான வரலாற்று தொன்மை காப்பக முனைப்பு பிரயோசனமாக அமையும்.

இவ்வகையில் இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பாதுகாத்து பேணும் நோக்கில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடியில் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 2013 ஜனவரி மாதம் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் காத்தான்குடியில் கலாசாரக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றை பேணி பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்கின்ற இந்த உயரிய கைங்கரியத்திற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களின் முழுமையான ஒத்துழைப்பு காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவினரால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இக் கண்காட்சியில் வரலாற்று பழைமை வாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டு பாவனைப் பொருட்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், பாரம்பரிய விவசாயம், மீன்பிடி கைத்தொழில்கள், மருத்துவம், சடங்குகள், தொடர்பாடல் முதலிய கருவிகள், உபகரணங்கள், வாழ்வியலை புலப்படுத்தும் அம்சங்கள் என்பன இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

முஸ்லிம்களின் தொன்மையான வரலாற்றையும் தேசத்திற்கான அவர்களின் தியாகங்கள், சேவைகள் மற்றும் பங்களிப்புக்களையும் பறைசாற்றுகின்ற மேற்குறிப்பிட்ட பொருட்கள், தகவல்கள், உபகரணங்கள், புகைப்படங்கள் பொது மக்களாகிய தங்களிடமிருந்து கோரப்படுகின்றன. அவை தொடர்பான தகவல்களை காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு வழங்கி இந்தப் பாரிய வரலாற்றைப் பாதுகாக்கும் முனைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காட்சிப்படுத்துவதற்கு உகந்தவற்றை 0776014850 அல்லது 0776162437 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது dskky@sltnet.lk எனும் மின்அஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தி, எதிர்வரும் டிசெம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் கிடைக்கச் செய்து வரலாற்றை ஆவணப்படுத்தும் இந்த முயற்சிக்கு மனமுவந்து ஆதரவு வழங்குமாறும் காட்சிப்படுத்தப்படும் பொருள்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும் எனவும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .