2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

எல்லைகள் வகுப்பது தொடர்பில் இணக்கமற்ற தன்மைகளும் முரண்பாடுகளும் தோன்றிவருகின்றன. பூ.பிரசாந்தன்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்,-எம்.சுக்ரி,-ரி.லோஹித்

சமீப நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லைகள் வகுப்பது தொடர்பில் சில இணக்கமற்ற தன்மைகளும் முரண்பாடுகளும் தோன்றிவருவதனை அவதானிக்க முடிகிறது. தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதனையும் இதனூடாக விரும்பத்தகாத மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு பாதகமான செயற்பாடுகள் நடந்தேறி வருவதையும் ஒரு பொறுப்புமிக்க மக்கள் கட்சி என்ற வகையில் நாம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன் வேதனையும் அடைகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிரான் மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள சி கிராம சேவகர் பிரிவுகளை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையினைத் தொடர்ந்து மட்டக்களப்பில் தோன்றியுள்ள முரண்பாட்டினை அடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் பலமாக இருந்த தமிழ், முஸ்லிம் சகோதர உறவுகள் சிதைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சங்தேகக் கண்கொண்டு பார்க்கும் கரும் பக்கங்களை எல்லாம் கடந்து வந்திருக்கின்றோம். ஒரே மொழி பேசி ஒரே மண்ணில் பன்நெடுங்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கடையில் விரிசல் ஏற்படுத்தப்பட்ட அக்காலம் எமது இரு சமூகங்களின் வரலாற்றுப் பக்கங்களில் கரும்பக்கங்களாகும்.

அதிஷ்டவசமாக கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட எமது கட்சித் தலைமையிலான முதலாவது மாகாணசபையின் ஊடாக  வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலப்படுத்தப்பட்ட தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப நாம் அடித்தளமிட்டோம். எமது கட்சித் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிர்வாக காலப்பகுதியில் இன ரீதியாக தனக்கு தீங்கிழைக்கப்பட்டதாகவோ அல்லது வஞ்சிக்கப்பட்டதாகவோ எம்மை நோக்கி  சுட்டுவிரல்  நீட்ட எந்த முஸ்லிம் சகோதரனின் மனச்சாட்சியும் இடம் கொடுக்காது. அவ்வாறு அரும்பாடுபட்டு நாம் கட்டியெழுப்பிய இனநல்லுறவை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சில சுயநல அரசியல்வாதிகள் சீர்குலைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிய தேர்தல் திருத்த விதிமுறைகளுக்கமைய நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான எல்லைகளை வகுப்பது தொடர்பில் மத்திய அரசு கவனமாகவும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும். இதனை நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொருளாதார அபிவிருத்தி, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளோம்.

தமிழ் மக்கள் காலங்காலமாக பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளை முஸ்லிம் பிரதேசங்களுடன் இணைத்து தமிழ் மக்களை சிறுபான்மையாக்குவதையோ, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளை தமிழ் பிரதேசங்களுடன் இணைத்து முஸ்லிம்களை சிறுபான்மைகளாக்குவதையோ விடுத்து, ஒரு சமூகத்தின் இனப்பரம்பல் தனித்துவம் பாதிக்காத வகையில் இவ் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். அதில் அரசியல் தலையீடுகளோ, அழுத்தங்களோ இருக்கக் கூடாது. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுடன் இணைந்து அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்பதற்காக, அரசியல் அழுத்தங்களினூடக தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் தனித்துவங்கள் மற்றும் எல்லைகள் பறிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ் எல்லைகள் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக தமிழ் முஸ்லிம் மக்கள் இனமுரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பில் எமது கட்சித் தலைமை அரச தரப்புடனும் குறித்த அமைச்சர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடி  உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாம் எக்காரணம் கொண்டும் எமது மக்களின் எல்லை பறிக்கப்படுவதையோ தனித்துவம் பாதிக்கப்படுவதனையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுக்கிடையிலான புரிந்துணர்வை விட்டுக் கொடுக்காமல் இனவாத சுயநல அரசியல்வாதிகளது கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். இயல்பு வாழ்க்கை சீர்கெடாமலும் மட்டக்களப்பின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் நிதானமாக சிந்தித்து செயற்படுமாறு நாம் அன்பாக வேண்டுகின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .