2026 மே 01, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Kanagaraj   / 2013 ஜனவரி 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜதுஷன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
 
போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்துப்பாதை, வெல்லாவெளி –காக்காச்சிவட்டைக்கான போக்குவரத்துப்பாதை ஆனைகட்டியவெளியூடான போக்குவரத்துப்பாதை என்பன துண்டிக்கப்பட்டுள்ளன.
 
வெள்ளத்தினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேற்றுச்சேனை கிராமத்துக்கு இயந்திரப்படகு மூலம் சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பதில் பணிப்பாளர் இன்பநாதன் ஆகியோர் அப்பகுதி நிலைமைகளை பார்வையிட்டதுடன் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது குறித்தும் ஆராய்ந்தனர்.
 
வெள்ள அனர்த்தம் காரணமாக வேற்றுச்சேனை கிராமத்தில் இந்த அனர்த்தம் காரணமாக சுமார் 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.இதேபோன்று ராணமடு பகுதிகளில் உள்ள சுமார் 54 குடும்பங்களை அங்கிருந்து மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நவகிரிக்குளத்தின் ஒரு வான்கதவு 4 அடி திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இக்குளத்தில் மேலும் 2 அடி நீர் மேலதிகமாக வெளியேறுவதாகவும் இக்குளத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் எஸ்.ஹேமகாந் தெரிவித்தார்.
 
இதன் காரணமாகவே போரதீவுப்பற்றின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இக்குளத்தில் 3 அடி உயரத்தில் மேலதிகமாக வெளியேறுவதாகவும்  உன்னிச்சைக் குளத்தில் 3 வான்கதவுகள் 10 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும்  இக்குளத்தில் 1 அடி 2 அங்குல உயரத்தில் மேலதிக நீர் வெளியேறுவதாகவும் இக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் ஏ.கிருஷாந்தன்  தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 145.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
 
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகள் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட பகுதிகளுக் விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன இதற்கான பணிகளில் நேரடியாக ஈடுபட்டார்.
 
வெல்லாவெளி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்கான உணவு விநியோகம் ஆகியவற்றினை மேற்கொள்ளும் வகையில் படையினர் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை வெல்லாவெளி பிரதேசத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .