2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்: இரா.துரைரெட்ணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்குவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளர்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நேற்று சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்;துவரும் அடை மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அறுவடைக்குத் தயார்  நிலையிலிருந்த வேளாண்மை முற்றிலும் அழிவடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட உப்பட்டியும்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,  அறுவடை செய்யப்பட்ட நெல்லும் ஈரம் காரணமாக உரிய விலைக்கு விற்க முடியாதுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாதிப்பின் தன்மைக்கேற்ப நஷ்டஈடு வழங்கி மீண்டும் தமது தொழிலை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்  கொடுக்க ஆவண செய்யவேண்டும்.

இம்மாவட்டத்தை பொறுத்தமட்டில் பெரும்போகத்தில் மாத்திரம் 175,721 ஏக்கரிலும்; சிறுபோகத்தில்  70,627 ஏக்கரிலும் வேளாண்மை பயிரிடப்பட்டு வந்துள்ளது.

இதில் 2012ஆம் ஆண்டு பெரும்போகத்தில் 157,236 ஏக்கரில் வேளாண்மை பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில்  14௨௨013ஆம் திகதிவரை அண்ணளவாக ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில்  விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யமுடியாமல்  கைவிடப்படடுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக அரசாங்கம் விதைநெல், உரம்  மட்டும் வழங்க முன்வந்துள்ளது. இத்தோடு   மாவட்டத்தில் காப்புறுதி செய்யப்பட்ட 8,622 ஏக்கருக்கு  மட்டும் நஷ்டஈடு வழங்கமுடியும் என காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

வங்கிகளிலும் தனியாரிடத்திலும் கடன்பெற்றவர்கள்  கடனை செலுத்த முடியாமல் பல சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்;. 

 குறிப்பாக காப்புறுதி செய்யப்பட்ட 9 சதவீதமான காப்புறுதி செய்யப்பட்ட  விவசாயிகளே நஷ்டஈட்டை பெறக்கூடியவாறு உள்ளது.  மீதமாக உள்ள 91 சதவீத விவசாயிகள் காப்புறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காப்புறுதி செய்யாத விவசாயிகளின் நிலை கவலை அழிக்கின்றது. எனவே இந்த  விவசாயிகளையும்  கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பை ஈடுசெய்ய மாகாண அரசாங்கம், மத்திய அரசாங்கம் உரமும், நெல்லும் மட்டும் வழங்காமல்  ஏக்கருக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபா படி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .